Sunday, 13 December 2015




இயல்பானவர்களுக்கு மட்டும்...

ஆசிரியர்   : கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்தி வேலாயுதம்
வெளியீடு  : வாசகன் பதிப்பகம், சேலம்,
விலை    : ரூ. 60 /-

     இயல்பாயிருத்தலே அழகு. மனிதர்கள், விலங்குகள், இயற்கை என எதுவும் இயல்பாக இருப்பதே அழகு.  அதுவே நம் ரசனையை மேம்படுத்தும். கால நெருக்கடியில் வாழ்தல் நிமித்தம், மனிதர்கள் இயல்பை இழக்கின்றனர். இன்னொன்றை பார்த்து இயல்பை இழப்பது எப்போதும் அழகாகாது.
    
     சமூகம், நம்பிக்கை, காதல் கவிதைகள் என தன் சிந்தனைகளை கவிதைகளாய் தொடுத்து இயல்பை இழக்கும் மனிதர்களுக்கிடையே இயல்பாய் வாழ்ந்து, வாழ்க்கைக்கு மேலும் அழகூட்டும் சிந்தனைகளை நூலாய் வடித்துள்ள கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்தி வேலாயுதம் அவர்களின் நூலே “இயல்பானவர்களுக்கு மட்டும்...”

     நடிப்பு இயல்பாக இருந்தாலே ரசிக்க முடியும். அத்தகைய இயல்பான நடிப்பையே எதிர்பார்க்கும் நாம், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நடிப்பின் துணைகொண்டே கழிக்கிறோம். இதனால் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக்கப்படுகிறார்கள் என்பதை,
“நடிப்பில் கூட
இயல்பை எதிர்பஆர்க்கும் நாம்
வாழ்க்கையை பெரும்பாலும்
நடித்தே கழிக்கிறோம்!”
என்று சாடுகிறார் கவிஞர்.

     நாம் நாமாய் இருத்தலே அழகு. பிறருக்காக நம்மை மாற்றிக் கொள்வதென்பது வாழ்க்கையின் யதார்த்தத்தை குலைத்துவிடும். நடிப்பை சாடிய கவிஞர் நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்பதை,
“பிறரை பின்பற்றுங்கள்
பிறராகி விடாதீர்
நீங்கள் நீங்களே...”
என்று வழிகாட்டுகிறார்.

     வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. வெற்றி வந்தால் தலைக்கனம் கொள்வதும், தோல்வி வந்தால் துவண்டுவிடுவதும் ஆகாது. இரண்டையும் ஒரே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடிய பக்குவத்தை வளர்த்தல் வேண்டும். அத்தகையை மனநிலையை பெறுவதற்கும், வாழ்வில் வெற்றியடையவும் விடாமுயற்சியே தாரக மந்திரம் என்பதை,
“பகலும் இரவும் பூமியின் சுழற்சி!
வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கையின் சுழற்சி!
விடாமுயற்சி மட்டுமே
உங்களின் வளர்ச்சி!”
என்று தெம்பூட்டுகிறார்.

தோற்றத்தை கண்டோ, ஒருவரின் அழகை கண்டோ வருவதல்ல காதல். அது இரு உள்ளங்களின் சங்கமம். பதின்பருவத்தில் தோற்றத்தைக் கண்டு வரும் ஈர்ப்பை காதல் என நம்பும் இளைய தலைமுறையினருக்கு உண்மையான காதல் எது என்பதை,
“மணிகணக்கில்
பேசினால் வருவதல்ல
காதல்...
மனக்கணக்கில் பேசும்போது
மலர்வதே காதல்!”
என்று அழகாக அடையாளம் காட்டுகிறார்.

     கவிதைக்கு அழகே வாழ்க்கையின் சின்னச்சின்ன நிகழ்வுகளில் உள்ள ரசனைகளை அடையாளம் காட்டி, அதன் வாயிலாக வாழ்க்கைக்கு உயிர்ப்பூட்டுவது தான். பெண்களின் அழகுக்கு அழகூட்டுவது அவர்களின் வெட்கமே. வெட்கத்தில் தலைகுனிந்து கால்களால் கோலமிடும் பெண்களின் செயலை,
“நீ போடும்
புள்ளிக்கோலத்தை விட
என் முன்னால்
உன் கால்கள் இடும்
வெட்கக்கோலமே மிக அழகு!”
என்ற கவிதையின் வாயிலாக ரசிக்க வைக்கிறார்.

“காகங்களாய் பிறந்திருக்கலாம்
எங்கோ
ஒரு கைப்பிடி உணவாவது
கிடைத்திருக்குமே...”
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். வறுமையில் வாடும் மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் பசிக்கு உணவே உரிய மருந்து. உணவின்றி தவிப்போர் ஒருபுறம் இருக்க, அன்றாடம் உணவு வகைகள் வீணாகும் நிகழ்வும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பறவைகளுக்கு கிடைக்கும் உணவு கூட ஏழைகளுக்கு கிடைப்பதில்லை என்ற ஏக்கத்தையும் வலியையும் இக்கவிதை உணர வைக்கிறது.

     ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. துளையிடுவதை பொறுக்கவியலாத மூங்கில் புல்லாங்குழலாகாது. ஆனால் இன்றைக்கு ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருப்பதால், எதிர்கால உலகம் என்னவாகுமோ என்ற அச்சம் மேலெழுகிறது.
“உதைபடும் விதைகள்
மட்டுமே
இங்கே விருட்சமாய் முடியும்!
(மாணவன்)”
என்று இருபொருள் தரும்படி கவிஞர் தன் திறனை நிரூபிக்கிறார்.

     கையடக்க நூல், அற்புதமான கட்டமைப்பு என ஒவ்வொரு கவிதைக்கும் உரிய படங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் நூலின் அட்டைப்படமும் அனைவரையும் ஈர்க்கிறது.

     சமூக வலைதளமான முகநூலில் நறுக்கு தெறிக்கும் தன் சிந்தனைகளால் அறியப்படும் இவரின் முதல் நூலே முத்திரை பதிக்கும் விதத்தில் இருப்பது பாராட்டுக்குரியது. எதிர்வரும் நாட்களில் கவிஞரிடமிருந்து இன்னும் முதிர்ந்த படைப்புகளை கட்டாயம் எதிர்பார்க்கலாம்.   

Friday, 27 November 2015


உண(ர்)வுத் திருவிழா



நூல்      : உண(ர்)வுத் திருவிழா (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்   : கவிஞர் நா.கி.பிரசாத்
விலை     : ரூ.50/-
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்
     “சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ.

சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், சொல்ல வரும் கருத்துகளை சொற்ப வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தும் பாங்கு என ஹைக்கூ கவிதைகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்து வலம் வருகின்றன.

     நறுக்குத் தெரித்தாற்போல் கருத்துக்களை வழங்கும் ஆற்றலுடன் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கும் நூல் உண(ர்)வுத் திருவிழா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட கவிஞர் நா.கி.பிரசாத் வாசகர்களின் உணர்வுகளுக்கு உணவாக பரிமாறியிருக்கும் இந்த ஹைக்கூத் திருவிழா உணர்வுகளின் தேரை இட்டுச்சென்றிருக்கிறது.

     “நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதனின் ஆற்றல் அள்ள அள்ள குறையாத அற்புத ஆற்றல் கேணி. மனிதர்கள் அவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அதை ஆக்கப்பூர்வமான வழியில் செலவழிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைத் தடத்தை பதிக்கிறது
“தோண்ட... தோண்ட....
தண்ணீர் முதல் தங்கம் வரை
உன்னுள்”
என்னும் கவிதை.

     பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் மனிதன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறப்பான். செய்கின்ற வேலைகளும் அந்த பத்தில் அடங்கும் என்பதை
“அறிவியலா..!ஆன்மீகமா..?
சர்ச்சை ஓய்ந்தது
இருவருக்கும் பசி!”
என்று அழகாக சிந்தித்துள்ளார் கவிஞர்.

     சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசு ஆலைகளிலும் கந்தகக் கிடங்குகளில் தளிர்களான குழந்தைகள் உழைத்து வெந்து தணிவது காலம் அறிந்த கண்கூடு. கல்வி கற்க வேண்டிய சிறார்கள் கந்தகக் கிடங்குகளில் உழைத்துக் களைப்பதை
“வெடித்துச் சிதறியது
சரஸ்வதி வெடி
சிவகாசியில்...!”
என்று நறுக்குத் தெரிக்கிற ஹைக்கூவாய் முன்வைத்து சிந்திக்க செய்துள்ளார் கவிஞர் நா.கி.பிரசாத்.

     சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் மட்டுமல்ல கவிஞர்கள் எள்ளலும் நகைச்சுவையும் ததும்பும் கருத்துக்களையும் இயற்றி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பர். மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள பாசத்தினால் மட்டுமல்ல, அது நன்கு வளர்ந்தவுடன் வெட்டி உண்டு களிக்கவும் தான் என்பதை
“வளர்த்த கடா
வயிற்றில் முட்டியது
கறி!”
என எள்ளலாக முன்வைக்கிறார் கவிஞர்.

     பிள்ளைகளின் மீது அளவற்ற அன்போடும் அக்கறையோடும் வளர்க்கும் பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைக்கு பரவிவரும் வழக்கமாகிவிட்டது. பெற்றோரை நன்றியுணர்வோடும் அக்கறை அன்போடும் பார்க்கவேண்டியது பிள்ளைகளின் கடமை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
“முற்றிய கதிர்
முகம் கவிழ்ந்தது
வேருக்கு நன்றி சொல்ல!”

     மகாகவி பாரதியார், கவிதை எழுதும் எல்லோருக்கும் ஆரம்பப்புள்ளியாய் இருந்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் முக்காலம் உணர்ந்த முத்தமிழ் கவிஞன். பாரதியை சிந்திக்கும் கவிஞர்,
“யானை அடித்த
முதல் சிங்கம்
பாரதி!””
என்று நச்சென்று கவிதை சொல்லி, கவிதை இதயத்தில் இடம்பிடிப்பது போலவே தானும் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.

“தலைகுனிந்தே
எண்ணப்படுகிறது
லஞ்சப்பணம்.”

“பரிகாரம் செய்தவுடன்
கஷ்டம் நீங்கியது
ஜோதிடருக்கு!”

“குண்டும் குழியுமான
சாலையில்
சீரகச் செல்கிறது ஊழல்.”
போன்ற இன்னும் சில ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.

நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் அழகான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளமாக வாசிக்க வசப்படுகின்றன. உணர்வைத்தூண்டி சிந்திக்க செய்யும் பல சிந்தனைகளை கவிதைகளாக கொடுத்திருக்கும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற நிலையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

கவிதைகளுக்கு சொற்சிக்கனம் அவசியம். குறிப்பாக ஹைக்கூவிற்கு அழகே சொற் சிக்கனம் தான் என்பதை கவிஞர் உணர்ந்து, நல்ல சிந்தனைகளை பரிமாற சிக்கனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் படைத்தால் இன்னும் பல திருவிழாக்களில் வலம் வரலாம்.


புத்தகம் போற்றுதும்




நூல்       : புத்தகம் போற்றுதும்
ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை
பக்கம்      : 224 பக்கங்கள்
விலை     : ரூ. 150 /-
வெளியீடு  : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17

புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.

எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.

ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை  இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.

தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.

     நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.

     கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார்.  “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.

     50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.
எ

கவியமுதம்



கவியமுதம்
கவிஞர் இரா.இரவி, மதுரை
வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை
விலை ரூ. 100/-

சாதிக்கத் துடிக்கும் மனிதர்களுக்கு உழைப்பும் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் இன்றியமையாத தேவை. சுறுசுறுப்பு,  உழைப்பு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்த சாதனை மனிதராய் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார் கவிஞர் இரா.இரவி.

ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கவிஞர், வாசகர்களுக்கு தன் புதுக்கவிதைகளை வாசிக்க பரிமாறியிருக்கும் நூலே கவியமுதம். நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் வாசகர்களை வாசிக்கத் தூண்டுகிறது.

நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி, பெண்ணின் பெருமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூக சித்திரிப்பு, உணர்ச்சி ஊர்வலம் என பல பிரிவுகளின் கீழ் தன் கவிதையை வகைப்பிரித்து வாசகர்களுக்கு கவிவிருந்து படைத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சாதிக்க இன்றியமையாத தேவை தன்னம்பிக்கை. அத்தகைய தன்னம்பிக்கையே மனிதனை சாதிக்கத் தூண்டும் என்பதை,

“என்னால் முடியாது
என்றே நினைத்தால்
முயன்றது முடியாது!

யாரை நீ நம்பாவிட்டாலும்
உன்னை நீ நம்பு!
நினைத்தது கிட்டும்!”
என நம்பிக்கைத் தெம்பூட்டுகிறார்.

     தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர்களின் பெருமைகளையும் பறைசாற்றும் தமிழ் – தமிழர் நலம் பிரிவில் தமிழின் பெருமைகளை மிடுக்கோடு கூறும் கவிஞர் “தமிழன் அன்றும் இன்றும்” எனும் கவிதையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பேகன், பாரி, மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, திருவள்ளுவர், கரிகாலன், இராஜராஜ சோழன் போன்றவர்களை பட்டியலிட்டு பெருமைப்படுத்துகிறார்.
    
தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா என சாதனையாளர்களின் சரித்திரம் பேசும் சான்றோர் திறத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் செயல்பாடுகளை,
     “விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை
     வீணாக்கும் என்றார் யாரும் கேட்கவில்லை!

     நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை
     நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார்!”
என பெருமைபட பட்டியலிடுகிறார்.

     “ஒரே ஒரு புன்னகை செய்தாள்
     ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தது!”
என காதல் உணர்வை கவிதையின் வழி நம்முள் கடத்துகிறார் கவிஞர்.

     மாறிவரும் பருவநிலை, புவி வெப்பமயமாதல், தண்ணீருக்கான போராட்டம் என மனிதர்கள் வாழும் பூமியை தங்கள் சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாழத்தகுதியற்றதாக மாற்றி வருகின்றனர். மனிதர்கள் மரங்கள் நடுவதை கடமையாக ஏற்று செய்ய வேண்டும் என கட்டளையிடும் கவிஞர்,

     “பூ தந்தேன்!
     காய் தந்தேன்!

     கனி தந்தேன்!
     நிழல் தந்தேன்!

     காற்று தந்தேன்!
     மனிதன் பரிசாக தந்தது கோடரியை!”
என மரங்களின் வேதனையை மனிதர்கள் உணரச் செய்கிறார்.

     “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற திரைப்பாடலைப் போல மண்ணின் மைந்தரான கவிஞர் மதுரையின் சிறப்பை,
     “ஈடு இணையற்ற எங்கள் மதுரை!
     நாடு போற்றும் நல்ல மதுரை!”
என மதுரையின் சிறப்புகளை பட்டியலிட்டு பெருமை கொள்கிறார்.

     ஹைக்கூ, நூல் விமர்சனம், கட்டுரை என எல்லா தளங்களிலும் முத்திரை பதித்தவர் கவிஞர் இரா.இரவி என்பதற்கு இந்த நூலும் ஒரு சான்று. அவரின் படைப்புலக மகுடத்தை அலங்கரிக்கும் மற்றுமொரு மாணிக்கமாகத் திகழும் இந்நூல் வாசகர்களுக்கு தமிழமுதத்தை கவியமுதமாய் பரிமாறியிருக்கிறது.