Friday, 9 December 2016
Thursday, 1 December 2016
Friday, 18 March 2016
எலிக்குஞ்சுகளும் படிநெல்லும்
நூல் : எலிக்குஞ்சுகளும் படிநெல்லும் (ஹைக்கூக் கவிதை நூல்)
ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ ரங்கராஜபுரம் துளசி
விலை : ரூ. 30-
வெளியீடு : அகநி வெளியீடு, அம்மையம்பட்டு, வந்தவாசி – 604408.
புல்லின் நுனியில் மிளிரும் பனித்துளி, வீடெங்கும் கோலங்களாய் மிளிரும் குழந்தையின் பிஞ்சுப்பாதச்சுவடுகள், தன் வருகையின் சுவடுகளே தெரியாது பூக்களின் மீது அமர்ந்து செல்லும் வண்டுகள் என இயற்கையின் சின்ன சின்ன அம்சங்கள் அத்தனையும் ரசனைக்குரியவை.இத்தகைய சின்ன சின்ன செயல்களில் உள்ள ஆனந்தத்தை அனுபவித்தலே வாழ்தலை அர்த்தமுள்ளதாக்கி, அதை மேலும் அழகாக்கும். மூவரிக் கவிதையாய் கவிதையுலகை வலம் வரும் ஹைக்கூவும் இத்தகைய இலக்கணத்துக்குட்பட்டு, அளவில் சிறியதாயினும் அதன் உள்ளடக்கங்களால் வாசிப்பையும் ரசனையையும் மேம்படுத்துகிறது.
இன்றைக்கு தமிழ் இலக்கிய உலகில் பரவலாக வெளிவரும் படைப்புகளுள் ஹைக்கூவும் ஒன்று. தன் கருத்துச் செறிவால் இன்றைய இலக்கிய உலகில் நீங்கா இடம்பெற்றிருக்கும் ஹைக்கூ கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக மலர்ந்துள்ளது கவிஞர் ஸ்ரீ ரங்கராஜபுரம் துளசி அவர்களின் “எலிக்குஞ்சுகளும் படிநெல்லும்” ஹைக்கூத் தொகுப்பு.
“களிப்பூட்டவும்
கலவரப்படுத்தவும்
புறப்பட்டுள்ள கவிதைகள்”
என்று ஹைக்கூக் கவிதை முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்களின் அணிந்துரையோடு தொடங்குகிறத் தொகுப்பின் அட்டைப்படமே நம்மை வெகுவாகக் கவர்கிறது.
உணவு, உடை, இருப்பிடம் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானவை. ஆனால் இவையில்லாமலேயே இன்னும் எத்தனையோ பேர் நம் நாட்டில் தவிக்கின்றனர். இத்தகைய சூழலில் தான் நாம் தேசத் தூய்மை பற்றி பேசுகிறோம். கழிப்பறைகள் இல்லாத சூழலில், பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக பெரிதும் சங்கடத்துக்குள்ளாவதை உணரும் வகையில் எடுத்துரைக்கிறார் கவிஞர் ஸ்ரீ ரங்கராஜபுரம் துளசி அவர்கள்,
“இருட்டில் ஒதுங்கிய
குப்பத்துப் பெண்கள்
விடியலே சற்றுப் பொறு”
நாம் உடுத்தும் ஆடைகள் பயன்படாமல் போகும்போது, அவற்றை மாற்றுப் பயன்பாட்டுக்காக பயன்படுத்துவது நம் இயல்பு. கிழிந்த சட்டையை சோளக்காட்டுப் பொம்மைக்கும், காகங்களை விரட்டவும் போன்று பலவிதமாக பயன்படுத்துவது வழக்கம். நெற்பயிர்களை சேதப்படுத்தும் குருவிகளை விரட்டி, பயிர்கள் சேதமாகாமல் இருப்பதற்கு தன் தாயின் பழைய சேலை பயன்பட்டிருப்பதையும், அப்பாவின் சட்டையை வயற்காட்டுப் பொம்மை அணிந்துகொண்டதையும்
“கரும்போர நெற்பயிர்
குருவி விரட்டுகிறது
அம்மாவின் பழைய சேலை”
“அப்பாவின் கிழிந்த சட்டை
மாட்டிக் கொண்டது
வயற்காட்டுப் பொம்மை”
என இருவேறு ஹைக்கூக்களில் அற்புதமான காட்சிப்பதிவுகளாகப் பதிவு செய்கிறார் கவிஞர்.
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்காக எதையும் செய்வது பெரியவர்களின் இயல்பு. அந்த குழந்தைகள் மகிழ்ந்திருப்பதைப் பார்த்து தானும் மகிழ்ந்திருக்கும் ஆனந்தமே தனி. குழந்தை தீபமேற்றுவதையும் அதை காற்று அணைக்காமல் இருக்கக் காற்றை திசை திரும்ப சொல்கிறது இந்த ஹைக்கூ.
“தீபமேற்றுகிறது குழந்தை
வேறு திசை பார்
காற்றே.”
குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அவர்களின் மகிழ்ச்சியில் நம் கவலைகள் மறந்து மகிழ்ந்திருக்கலாம் என கடவுள் குழந்தைகளைத் தேடி வருவதாக சொல்கிறது கவிஞரின் இந்த ஹைக்கூ
“இருக்க இடம் வேண்டி
கடவுள் வருகிறார்
குழந்தைகள் நிறைந்த வீடு”
குழந்தைகளைத் தேடி வரும் கடவுள் குறித்த இந்த ஹைக்கூ எனது “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூலில் இடம்பெற்ற
“குழந்தைகளைத் தேடும்
கடவுள்
நிம்மதிப் பெருவாழ்வு”
என்ற ஹைக்கூவை நினைவூட்டுகிறது.
வனங்கள் செழித்திருப்பதற்கு பறவைகளும் ஒரு காரணம். தங்கள் எச்சங்களால் எண்ணற்ற மரங்கள் இம்மண்ணில் வேரூன்ற ஆதாரமாய் இருப்பவை பறவைகள். மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல் போன்றவற்றின் விளைவுகளால் காடுகள் அழிந்து வருவதையும் மண்வளம் குறைந்து வருவதையும் சமூகப்பார்வையோடு சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்,
“பறவையின் எச்சத்தில்
தளிர்விடாத பூமி
அழிந்தது வனம்”
இதே இயற்கைப் பார்வையோடு காற்று மாசுபடுவதை சுட்டிக்காட்டுகிறது இன்னொரு ஹைக்கூ
“தீபாவளி
புகையால் கலங்குகிறது
வளி”
பொது நிறுவனங்களில் மக்களின் குறைதீர்க்க புகார் பெட்டிகள் வைத்திருப்பர். புகார் பெட்டிகளில் புகார்கள் இடப்பட்டாலும் அது சார்ந்து எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது நம்பிக்கையை இழக்கச் செய்யும். இதனாலேயே பெரும்பாலான புகார் பெட்டிகள் காலியாக இருக்கின்றன. இதை அற்புதமான காட்சிப்பதிவாக்கி சமூக பிரச்சனையோடு இயற்கையை இணைத்திருக்கிறார் கவிஞர்
“தைரியமாய்
கூடு கட்டியது குளவி
புகார்ப்பெட்டி”
“தினந்தினம்
ஏறி இறங்குகிறது அய்க்கூ
தேசியக் கொடி”
ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகளில் அமைந்திருப்பதையும் தேசியக்கொடி மூன்று வர்ணங்களால் அமைந்திருப்பதையும் அழகாக ஒப்பிட்டு தன் அழகியல் பார்வையைப் பதிவு செய்வதுடன், அந்த உணர்வை வாசகர்களின் உள்ளத்துக்கும் கடத்துகிறார் கவிஞர்.
“வீடு திரும்பவேயில்லை
மீன் பிடிக்கச் சென்ற அப்பா
காத்திருக்கும் சிறுவன்”
“வெகுவாகக் குறைந்துவிட்டன
பறவை ஊர்வலம்
செல்பேசிக் கோபுரம்”
“தாலிக்குக் குனிந்தாள்
நிமிரவேயில்லை
அடுப்பங்கரையில் கனவு”
முதலிய முத்திரைப் பதிக்கும் ஹைக்கூ கவிதைகளை தொகுப்பெங்கும் காண முடிகிறது. கவிதைகளுக்கான நிழற்படங்கள் தொகுப்புக்கு மேலும் அழகு சேர்த்திருக்கின்றன.
“எளிய வாழ்வின் இனிமையான காட்சிகளை எந்த பூச்சுமற்று எழுதியுள்ள கவிஞர் துளசியின் பலமே... குறைந்த சொற்களில், செறிவான அர்த்தத்தோடு நம் விழித்திரை முன் பெரிய சித்திரத்தை வரைந்து போவதே” என்று அணிந்துரையில் பாராட்டியுள்ள ஹைக்கூ முன்னோடி கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உறுதிபடுத்துகிறார் கவிஞர் துளசி.
முதல் தொகுப்பிலேயே முத்திரைப் பதிக்கும் ஹைக்கூ கவிதைகளால் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கும் கவிஞர் துளசி நல்ல பல படைப்புகளை எதிர்காலத்தில் தருவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது இத்தொகுப்பு.
மதிப்புரை
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்
பேச - 9790231240
Tuesday, 9 February 2016
திமிரும் நீயும் ஒரே சாயல்
ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்,
விலை : ரூ. 75 /-
மனித மனங்களை புதுப்பித்து, வாழ்வின் சின்னச் சின்ன நிமிடங்களை ரசித்து, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச்செய்யும் அற்புதம் காதல். கேட்ட கனத்திலேயே மனதில் புத்துணர்வை பூக்கச் செய்யும் மந்திரமான காதலால் வசீகரிக்கப்படாதவர்களே உலகில் இல்லை எனலாம். இளைய இதயங்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்கள் கட்டிவைத்திருக்கும் காதல் தான், பெரும்பான்மையான கவிதைகள் ஊற்றெடுக்கும் முதற்புள்ளி. அத்தகைய காதல் உணர்வை வாசகர்களின் உள்ளத்தில் தூண்டச்செய்யும் இனிய கவிதைகளுடன் கவிதாயினி ஷர்மிவீரா படைப்பில் வெளியாகியிருக்கிறது “திமிரும் நீயும் ஒரே சாயல்” கவிதை நூல்.
நூலின் தலைப்பைப் போலவே, அட்டைப்படமும் வாசகர்களை வசீகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஆண் கவிஞர்களின் படைப்பில் எத்தனையோ காதல் கவிதை நூல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் சூழலில், ஒரு பெண்ணாக தன் காதல் உணர்வுகளை கவிதை வழி வெளிப்படுத்தியிருக்கும் கவிதாயினி ஷர்மிவீரா அவர்களின் தனித்துவத்தால் மிளிர்கிறது இந்நூல்.
“இருளில் தென்பட்ட
ஒளி போல
என் வாழ்வில்
தென்பட்ட வெளிச்சம்
நீயும்..
உன் காதலும்...!”
என்று தன் காதலின் நேர்மறைப் பக்கங்களைப் பற்றி பேசுகிறார். காதல் பலரது வாழ்க்கையை வெளிச்சத்தின் திசை நோக்கி திரும்பச் செய்து, வெற்றிக்கனிகளை சுவைக்க செய்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக நிற்கிறது இக்கவிதை.
“ஷர்மி இன்றைய காலத்தின் காதலைக் காட்சிப்பூர்வமாகக் கவித்துவப்படுத்த விழைகிறார். முடிந்த அளவுக்குத் தன் பாடுபொருளாக ஏக்கத்தையும் பிரிவாற்றாமையையும் மாத்திரம் கைக்கொள்ளாமல், முத்தத்தையும் இறுகி அணைத்து, இருவர் கரைந்து ஒருவராவதையும் சேர்த்தே பேசுகிறார்” என்று எழுத்தாளர் ஆத்மார்த்தி தன் அணிந்துரையில் கூறியிருப்பதற்கு சான்றாக இக்கவிதை ஒன்றே போதும்.
“நேற்றைய பொழுதை எண்னி
இன்றைய நிஜத்தை
இழந்து விடாதே!”
என வாழ்வின் எதிர்காலம் குறித்தோ, நடந்தவை குறித்தோ கவலைக் கொள்ளாமல் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று காதலுக்கிடையில் எல்லோர்க்குமான பொதுவான கவிதையொன்றையும் தத்துவமாக முன்வைக்கிறார் இவர்.
காதலில் தோற்பதுவும் வெற்றியே. விட்டுக்கொடுத்தல் குடும்ப வாழ்க்கைக்கு மட்டுமல்ல, காதலுக்கும் அதுவே அடிப்படைப் பண்பு என்பதை ஒரு ஆணின் பார்வையிலிருந்து சொல்கிறார்.
“கனவிலும்
விவாதம் செய்யும்
என்
செல்ல ராட்சசியை
வெல்ல மனமில்லை..
அவளே
வெற்றி பெறுகிறாள்
காதல் யுத்ததிலும்
முத்தக் களத்திலும்”
காதல், வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கும் அற்புதம். வாழ்வின் சின்ன சின்ன நிகழ்வுகளில் உள்ள அழகியலை ரசிக்கச் சொல்லித்தரும் பயிற்சிப்பட்டறை இந்த காதல் களம் என்பதை
“காலடிச் சுவடையும்
முத்தமிட்டுச் சென்றேன்!
மணலும்
சுவைக்க ஆரம்பித்தது!”
என்று அழகியலை முன்வைக்கிறார் இவர்.
தாய்மை, பெண்மையின் உயர்வு, பெண்மையின் தனித்துவம், தியாகத்தின் பிறப்பிடம். பிரசவம் என்பது இன்னொரு பிறப்பு என்பார்கள். அந்த பிரசவத்தின் வலியை கவிதையில் பதிவு செய்து, அதன் வழி பெண்களின் தியாகவுணர்வையும் வாசகர்களின் உள்ளத்துக்குள் கடத்துகிறார் இவர்.
“ஓருயிரா
ஈருயிரா என
குழப்பம் திகைக்க...
இறைவா!
இதோ எடுத்துக்கொள்
என் உயிரை என
நானே முணங்க...
என்னை வந்தடைந்தது
நான் பெறா
இரு உயிர்களும்..
நீ..
நான்..
நாம்!”
என தாய்மையின் பெருமை குறித்து கூறுகிறார்.
“நம்
விரல்கள் இணைந்தன...
நமக்கு முன்னே
முத்தமிட்டுக் கொண்டன
நம் மோதிரங்கள்!”
காதலில் உள்ள அழகியலை அப்படியே வாசகர்களின் இதயத்துள் கடத்துகிறார் இவர். விரல்கள் இணைவதில் முட்டிக்கொள்ளும் மோதிரங்கள், முத்தமிட்டுக் கொள்கின்றன என்ற அழகியல் பதிவின் மூலம் கவிதைக்குண்டான அழகியலை வெளிப்படுத்துகிறார்.
காதலிக்கும் பெண்களுக்குண்டான இயல்புகளை பட்டியலிடும் “மீண்டுமோர் காதல் தாகம்”, முத்தங்களை பாடலென சிலாகிக்கும் கவிதையென தொகுப்பெங்கும் நல்ல நல்ல கவிதைகள் வாசிக்க கிடைக்கின்றன.... கவிதைகளுக்கு மேலும் அழகூட்ட நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இணைத்திருப்பது தொகுப்பை மேலும் அழகூட்டுகிறது.
“எது நிஜம்... எது புனைவு... என்கிற கேள்வியே எழாதவாறு கவிஞர்களுக்கே உரித்தான மொழியில் விவரிப்பது தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி. அப்போது தான் இரு மனமும் அந்த மனதின் காதலும் ஒன்றுடன் ஒன்றான நிகழ்வுகளாய் சுவாரஸ்யம் கூட்டி, படிக்கும் நம்மையும் காதலர்களாய் கட்டுக்குள் வைக்கும். அதில் நம் கவிஞர் ஷர்மிவீரா வெற்றி பெற்றுள்ளார்” என்ற பாவையர் மலர் இதழ் ஆசிரியர் வான்மதி அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க, “திமிரும் நீயும் ஒரே சாயல்” என்ற காதல் கவிதைகள் தொகுப்பின் வாயிலாக கவியுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் கவிதாயினி ஷர்மிவீரா இத்தொகுப்பில் வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். இன்னும்பல தொகுப்புகளை வெவ்வேறு பாடுபொருளில் தருவார் என்ற நம்பிக்கையை தருகிறது இத்தொகுப்பு.
ஆக்கம்
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்
9790231240

