இயல்பானவர்களுக்கு மட்டும்...
ஆசிரியர் : கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்தி வேலாயுதம்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்,
விலை : ரூ. 60 /-
இயல்பாயிருத்தலே அழகு. மனிதர்கள், விலங்குகள்,
இயற்கை என எதுவும் இயல்பாக இருப்பதே அழகு.
அதுவே நம் ரசனையை மேம்படுத்தும். கால நெருக்கடியில் வாழ்தல் நிமித்தம், மனிதர்கள்
இயல்பை இழக்கின்றனர். இன்னொன்றை பார்த்து இயல்பை இழப்பது எப்போதும் அழகாகாது.
சமூகம், நம்பிக்கை, காதல் கவிதைகள் என தன் சிந்தனைகளை
கவிதைகளாய் தொடுத்து இயல்பை இழக்கும் மனிதர்களுக்கிடையே இயல்பாய் வாழ்ந்து, வாழ்க்கைக்கு
மேலும் அழகூட்டும் சிந்தனைகளை நூலாய் வடித்துள்ள கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்தி வேலாயுதம்
அவர்களின் நூலே “இயல்பானவர்களுக்கு மட்டும்...”
நடிப்பு இயல்பாக இருந்தாலே ரசிக்க முடியும். அத்தகைய
இயல்பான நடிப்பையே எதிர்பார்க்கும் நாம், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நடிப்பின்
துணைகொண்டே கழிக்கிறோம். இதனால் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக்கப்படுகிறார்கள் என்பதை,
“நடிப்பில்
கூட
இயல்பை
எதிர்பஆர்க்கும் நாம்
வாழ்க்கையை
பெரும்பாலும்
நடித்தே
கழிக்கிறோம்!”
என்று
சாடுகிறார் கவிஞர்.
நாம் நாமாய் இருத்தலே அழகு. பிறருக்காக நம்மை
மாற்றிக் கொள்வதென்பது வாழ்க்கையின் யதார்த்தத்தை குலைத்துவிடும். நடிப்பை சாடிய கவிஞர்
நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்பதை,
“பிறரை
பின்பற்றுங்கள்
பிறராகி
விடாதீர்
நீங்கள்
நீங்களே...”
என்று
வழிகாட்டுகிறார்.
வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு
பக்கங்களை போன்றவை. வெற்றி வந்தால் தலைக்கனம் கொள்வதும், தோல்வி வந்தால் துவண்டுவிடுவதும்
ஆகாது. இரண்டையும் ஒரே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடிய பக்குவத்தை வளர்த்தல் வேண்டும்.
அத்தகையை மனநிலையை பெறுவதற்கும், வாழ்வில் வெற்றியடையவும் விடாமுயற்சியே தாரக மந்திரம்
என்பதை,
“பகலும்
இரவும் பூமியின் சுழற்சி!
வெற்றியும்
தோல்வியும்
வாழ்க்கையின்
சுழற்சி!
விடாமுயற்சி
மட்டுமே
உங்களின்
வளர்ச்சி!”
என்று
தெம்பூட்டுகிறார்.
தோற்றத்தை கண்டோ, ஒருவரின் அழகை கண்டோ வருவதல்ல
காதல். அது இரு உள்ளங்களின் சங்கமம். பதின்பருவத்தில் தோற்றத்தைக் கண்டு வரும் ஈர்ப்பை
காதல் என நம்பும் இளைய தலைமுறையினருக்கு உண்மையான காதல் எது என்பதை,
“மணிகணக்கில்
பேசினால்
வருவதல்ல
காதல்...
மனக்கணக்கில்
பேசும்போது
மலர்வதே
காதல்!”
என்று
அழகாக அடையாளம் காட்டுகிறார்.
கவிதைக்கு அழகே வாழ்க்கையின் சின்னச்சின்ன நிகழ்வுகளில்
உள்ள ரசனைகளை அடையாளம் காட்டி, அதன் வாயிலாக வாழ்க்கைக்கு உயிர்ப்பூட்டுவது தான். பெண்களின்
அழகுக்கு அழகூட்டுவது அவர்களின் வெட்கமே. வெட்கத்தில் தலைகுனிந்து கால்களால் கோலமிடும்
பெண்களின் செயலை,
“நீ
போடும்
புள்ளிக்கோலத்தை
விட
என்
முன்னால்
உன்
கால்கள் இடும்
வெட்கக்கோலமே
மிக அழகு!”
என்ற
கவிதையின் வாயிலாக ரசிக்க வைக்கிறார்.
“காகங்களாய்
பிறந்திருக்கலாம்
எங்கோ
ஒரு
கைப்பிடி உணவாவது
கிடைத்திருக்குமே...”
பசி
வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். வறுமையில் வாடும் மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும்
பசிக்கு உணவே உரிய மருந்து. உணவின்றி தவிப்போர் ஒருபுறம் இருக்க, அன்றாடம் உணவு வகைகள்
வீணாகும் நிகழ்வும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பறவைகளுக்கு கிடைக்கும்
உணவு கூட ஏழைகளுக்கு கிடைப்பதில்லை என்ற ஏக்கத்தையும் வலியையும் இக்கவிதை உணர வைக்கிறது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி.
துளையிடுவதை பொறுக்கவியலாத மூங்கில் புல்லாங்குழலாகாது. ஆனால் இன்றைக்கு ஆசிரியர்களின்
கைகள் கட்டப்பட்டிருப்பதால், எதிர்கால உலகம் என்னவாகுமோ என்ற அச்சம் மேலெழுகிறது.
“உதைபடும்
விதைகள்
மட்டுமே
இங்கே
விருட்சமாய் முடியும்!
(மாணவன்)”
என்று
இருபொருள் தரும்படி கவிஞர் தன் திறனை நிரூபிக்கிறார்.
கையடக்க நூல், அற்புதமான கட்டமைப்பு என ஒவ்வொரு
கவிதைக்கும் உரிய படங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் நூலின் அட்டைப்படமும்
அனைவரையும் ஈர்க்கிறது.
சமூக வலைதளமான முகநூலில் நறுக்கு தெறிக்கும் தன்
சிந்தனைகளால் அறியப்படும் இவரின் முதல் நூலே முத்திரை பதிக்கும் விதத்தில் இருப்பது
பாராட்டுக்குரியது. எதிர்வரும் நாட்களில் கவிஞரிடமிருந்து இன்னும் முதிர்ந்த படைப்புகளை
கட்டாயம் எதிர்பார்க்கலாம்.
