கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்களின்
“இதயம் தொட்ட எழுதுகோல்”
நூல் : இதயம் தொட்ட எழுதுகோல்
ஆசிரியர் : கவிஞர் எம்.எஸ்.வேல்
வெளியீடு : சபரிமதி வெளியீடு, சேலம்.
பக்கங்கள் : 80
விலை : ரூ. 50 /-
எழுதுகோலுக்கும்
கவிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கவிஞர்களின் இதயம் பேசும் மொழியை உணர்ந்து
அதை தாளில் வார்த்தெடுக்கும் வர்ணஜால வித்தைகளை நிகழ்த்தவல்லது எழுதுகோல். சமுதாயத்தின்
வளர்ச்சிக்கான விதைகள் விதைக்கப்படுவது எழுதுகோலால் தான். ஒவ்வொரு படைப்பாளரின் எழுதுகோலும்
அவர்தம் எழுத்துகளும் சமுதாயத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றவை.
அதனாலேயே படைப்பாளர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறது சமூகம்.
இத்தகு
சிறப்பு வாய்ந்த எழுதுகோலில் தன் எண்ணங்களை மையாக ஊற்றி, இதயத்திலிருந்து எழுதிய கவிதைகளை
“இதயம் தொட்ட எழுதுகோலாய்” தமிழுலகிற்கு வழங்கியிருக்கிறார் கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்கள்.
கவிதைகளை
அழகுபடுத்தி நம் நெஞ்சில் நிலைபெற செய்வது கவிஞர்களின் கற்பனையுணர்வு. பூக்கள் என்றாலே
தனியழகு தான். பூக்கள் நிறைந்த சோலை மேலும் அழகு. சோலையில் மட்டுமல்ல சேலையில் வலம்
வரும் பெண்களும் பூக்களே. இரண்டும் அழகே என்று தன் கற்பனையை வாசகர்களுக்கு விருந்தாக்குகிறார்
கவிஞர்.
“சோலையில் மட்டுமல்ல
சேலையிலும் அழகுதான்
பூக்கள்”
குழந்தைகளை விளையாடவிட வேண்டும், அப்போது
தான் அவர்களின் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பலப்படும். அத்தகைய குழந்தைகளில்
உடல்குறைபாடு உள்ள குழந்தைகளை எப்படி விளையாட சொல்வது, என்ற தன் இரக்க மனதை கவிதையில்
படம்பிடித்து காட்டுகிறார் கவிஞர்
''ஓடிவிளையாடு
பாப்பா
கற்பிக்க
மனமில்லை
போலியோ
குழந்தைகள்''
நகரமயமாதலின் விளைவால் வாகனங்கள்
பெருக, காற்று மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. காற்று மாசில்லாமல்
இருந்தால் தான் சுற்றுசூழலும் மனிதர்களும் நலமாக இருக்க முடியும். மனிதர்களின் நலன்
பேணவும் இயற்கையின் நலன் காக்கவும் கவிஞர் தன் கவிதைகளில் தீர்வுகளை முன்வைத்து நம்
நெஞ்சில் நிலைக்கிறார்.
''எரிபொருள்
குறை
வெடிபொருள்
தவிர்
காத்திடும்
காற்றின் கற்பு''
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை
மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது எல்லோரும் அறிந்ததே. இவற்றுள் எல்லோர்க்கும் எல்லாமும்
கிடைப்பது அரிதாகி வருகிறது. முறையாக பராமரிக்கப்படாத நீர்நிலைகளால் ஆற்று பகுதியில்
அவ்வப்போது வெள்ளம் வருவதும், அதில் வீடுகள் அடித்து செல்லபடுவதுமென மக்கள் பெரிதும்
துயருறுவதை தன் கவிதைக்கண் கொண்டு பரிதாபப்படுகிறார்
கவிஞர்.
''காட்டாற்று
வெள்ளநீரை
அள்ளிப்
பருகினேன்
உப்புக்கரித்தது
கலந்தே
இருந்தது
வீடு
இழந்தோரின்
கண்ணீர்''
''எத்தனை
பெரிய மனிதருக்கு எதனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு, எத்தனை பெரிய அறிவிருக்கு''
என்று ‘ஆசைமுகம்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருப்பார். பொருளாதார நிலையிலல்ல, நம்
எண்ணங்களிலேயே நம் உயர்வுகள் இருக்கின்றன என்பதை,
''உயர்ந்த
மளிகை
தாழ்ந்த
நுழைவாயில்
விரட்டப்படும்
வறியோர்''
என்று உணர்த்துகிறார் கவிஞர்.
கற்பனையென்பது கவிஞர்களுக்கு கைவரப்பெற்ற
வரம். கற்பனையே கவிஞர்கள் உயர காரணமாகிறது. கவிஞர் தன் கற்பனையை நூலின் பல கவிதைகளில்
பதிவு செய்திருக்கிறார். உதாரணமாக மேகங்களில் தான் கண்ட பிம்பங்களை,
''சற்றுமுன்
நான்கண்ட
பெருத்த
யானை
மாறியிருந்தது
அழகிய
தொகை
விரித்தாடும்
மயிலை
அசையும்
மேகங்கள்''
என்று கவிதையாக்கியுள்ளார்.
மரத்தின் வளர்ச்சிக்கு வேர்கள்
காரணமாய் இருப்பது போல், இந்த உலகில் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களின்
பிறப்புக்கும் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் காரணம் அவர்களின் பெற்றோரே. ஆனால் வாழ்வில்
தான் எதிர்பார்த்த நிலையை அடைந்தவுடன் அந்த வளர்ச்சி தன் சுயமுயற்சியால் வந்தது என
பெற்றோரை புறந்தள்ளுவோரை தன் கவிதையில் சாடுகிறார் கவிஞர்.
''ஆணிவேராய்
தாய் மண்ணிருக்க
அதன்
பிடியாய் தந்தையிருக்க
சில
அறியாக்கிளைகள்
உதிர்க்கின்றன
வார்த்தைகளை
நான்
தானை
வளர்ந்த மரமென்று''
''இதயம் தொட்ட எழுதுகோல்''
நூல் சிந்தித்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு என்பதைவிட நான் சந்தித்த நிகழ்வுகளின்
தொகுப்பு என்று கூறலாம் - என்று நூலின் என்னுரையில் கவிஞர் கூறியிருப்பதைப்போல், நூலின்
கவிதைகள் சமூகத்தையும் கவிஞரின் உள்ளத்தையும் பிரதிபலிக்கின்றன. நூலில் இடம்பெற்ற குறுங்கவிதைகளை
காட்டிலும் ஹைக்கூ கவிதைகள் சட்டென இதயத்தில் இடம்பிடிக்கின்றன. ''இதயம் தொட்ட எழுதுகோல்''
கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்களை இலக்கிய உலகில் சாதனையை தொடவைக்கும் ஆரம்பப்புள்ளியாக
விளங்குகிறது.
நூலாய்வு
கவிஞர்
ச.கோபிநாத்
சேலம்
