Tuesday, 9 February 2016

திமிரும் நீயும் ஒரே சாயல்

ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்,
விலை : ரூ. 75 /-

மனித மனங்களை புதுப்பித்து, வாழ்வின் சின்னச் சின்ன நிமிடங்களை ரசித்து, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச்செய்யும் அற்புதம் காதல். கேட்ட கனத்திலேயே மனதில் புத்துணர்வை பூக்கச் செய்யும் மந்திரமான காதலால் வசீகரிக்கப்படாதவர்களே உலகில் இல்லை எனலாம். இளைய இதயங்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்கள் கட்டிவைத்திருக்கும் காதல் தான், பெரும்பான்மையான கவிதைகள் ஊற்றெடுக்கும் முதற்புள்ளி. அத்தகைய காதல் உணர்வை வாசகர்களின் உள்ளத்தில் தூண்டச்செய்யும் இனிய கவிதைகளுடன் கவிதாயினி ஷர்மிவீரா படைப்பில் வெளியாகியிருக்கிறது “திமிரும் நீயும் ஒரே சாயல்” கவிதை நூல்.

நூலின் தலைப்பைப் போலவே, அட்டைப்படமும் வாசகர்களை வசீகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஆண் கவிஞர்களின் படைப்பில் எத்தனையோ காதல் கவிதை நூல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் சூழலில், ஒரு பெண்ணாக தன் காதல் உணர்வுகளை கவிதை வழி வெளிப்படுத்தியிருக்கும் கவிதாயினி ஷர்மிவீரா அவர்களின் தனித்துவத்தால் மிளிர்கிறது இந்நூல்.

“இருளில் தென்பட்ட
ஒளி போல
என் வாழ்வில்
தென்பட்ட  வெளிச்சம்
நீயும்..
உன் காதலும்...!”
என்று தன் காதலின் நேர்மறைப் பக்கங்களைப் பற்றி பேசுகிறார். காதல் பலரது வாழ்க்கையை வெளிச்சத்தின் திசை நோக்கி திரும்பச் செய்து, வெற்றிக்கனிகளை சுவைக்க செய்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக நிற்கிறது இக்கவிதை.

“ஷர்மி இன்றைய காலத்தின் காதலைக் காட்சிப்பூர்வமாகக் கவித்துவப்படுத்த விழைகிறார். முடிந்த அளவுக்குத் தன் பாடுபொருளாக ஏக்கத்தையும் பிரிவாற்றாமையையும் மாத்திரம் கைக்கொள்ளாமல், முத்தத்தையும் இறுகி அணைத்து, இருவர் கரைந்து ஒருவராவதையும் சேர்த்தே பேசுகிறார்” என்று எழுத்தாளர் ஆத்மார்த்தி தன் அணிந்துரையில் கூறியிருப்பதற்கு சான்றாக இக்கவிதை ஒன்றே போதும்.

“நேற்றைய பொழுதை எண்னி
இன்றைய நிஜத்தை
இழந்து விடாதே!”
என வாழ்வின் எதிர்காலம் குறித்தோ, நடந்தவை குறித்தோ கவலைக் கொள்ளாமல் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று காதலுக்கிடையில் எல்லோர்க்குமான பொதுவான கவிதையொன்றையும் தத்துவமாக  முன்வைக்கிறார் இவர்.

காதலில் தோற்பதுவும் வெற்றியே. விட்டுக்கொடுத்தல் குடும்ப வாழ்க்கைக்கு மட்டுமல்ல, காதலுக்கும் அதுவே அடிப்படைப் பண்பு என்பதை ஒரு ஆணின் பார்வையிலிருந்து  சொல்கிறார்.
“கனவிலும்
விவாதம் செய்யும்
என்
செல்ல ராட்சசியை
வெல்ல மனமில்லை..

அவளே
வெற்றி பெறுகிறாள்
காதல் யுத்ததிலும்
முத்தக் களத்திலும்”

காதல், வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கும் அற்புதம். வாழ்வின் சின்ன சின்ன நிகழ்வுகளில் உள்ள அழகியலை ரசிக்கச் சொல்லித்தரும் பயிற்சிப்பட்டறை இந்த காதல் களம் என்பதை
“காலடிச் சுவடையும்
    முத்தமிட்டுச் சென்றேன்!
     மணலும்
     சுவைக்க ஆரம்பித்தது!”
என்று அழகியலை முன்வைக்கிறார் இவர்.

தாய்மை, பெண்மையின் உயர்வு, பெண்மையின் தனித்துவம், தியாகத்தின் பிறப்பிடம். பிரசவம் என்பது இன்னொரு பிறப்பு என்பார்கள். அந்த பிரசவத்தின் வலியை கவிதையில் பதிவு செய்து, அதன் வழி பெண்களின் தியாகவுணர்வையும் வாசகர்களின் உள்ளத்துக்குள்  கடத்துகிறார் இவர்.
“ஓருயிரா
ஈருயிரா என
குழப்பம் திகைக்க...

இறைவா!
இதோ எடுத்துக்கொள்
என் உயிரை என
நானே முணங்க...

என்னை வந்தடைந்தது
நான் பெறா
இரு உயிர்களும்..

நீ..
நான்..
நாம்!”
என தாய்மையின் பெருமை குறித்து கூறுகிறார்.

“நம்
விரல்கள் இணைந்தன...
நமக்கு முன்னே
முத்தமிட்டுக் கொண்டன
நம் மோதிரங்கள்!”
காதலில் உள்ள அழகியலை அப்படியே வாசகர்களின் இதயத்துள் கடத்துகிறார் இவர். விரல்கள் இணைவதில் முட்டிக்கொள்ளும் மோதிரங்கள், முத்தமிட்டுக் கொள்கின்றன என்ற அழகியல் பதிவின் மூலம் கவிதைக்குண்டான அழகியலை வெளிப்படுத்துகிறார்.

காதலிக்கும் பெண்களுக்குண்டான இயல்புகளை பட்டியலிடும் “மீண்டுமோர் காதல் தாகம்”, முத்தங்களை பாடலென சிலாகிக்கும் கவிதையென தொகுப்பெங்கும் நல்ல நல்ல கவிதைகள் வாசிக்க கிடைக்கின்றன.... கவிதைகளுக்கு மேலும் அழகூட்ட நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இணைத்திருப்பது தொகுப்பை மேலும் அழகூட்டுகிறது.

“எது நிஜம்... எது புனைவு... என்கிற கேள்வியே எழாதவாறு கவிஞர்களுக்கே உரித்தான மொழியில் விவரிப்பது தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி. அப்போது தான் இரு மனமும் அந்த மனதின் காதலும் ஒன்றுடன் ஒன்றான நிகழ்வுகளாய் சுவாரஸ்யம் கூட்டி, படிக்கும் நம்மையும் காதலர்களாய் கட்டுக்குள் வைக்கும். அதில் நம் கவிஞர் ஷர்மிவீரா வெற்றி பெற்றுள்ளார்” என்ற பாவையர் மலர் இதழ் ஆசிரியர் வான்மதி அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க, “திமிரும் நீயும் ஒரே சாயல்” என்ற காதல் கவிதைகள் தொகுப்பின் வாயிலாக கவியுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் கவிதாயினி ஷர்மிவீரா இத்தொகுப்பில் வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். இன்னும்பல தொகுப்புகளை வெவ்வேறு பாடுபொருளில் தருவார் என்ற நம்பிக்கையை தருகிறது இத்தொகுப்பு.

ஆக்கம்
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்
9790231240