Monday, 18 December 2017



நூல் வாசல்
மனதோடு மழைச்சாரல்
கவிஞர் ச.கோபிநாத்
நூல்                       : மனதோடு மழைச்சாரல் (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்             : கவிஞர் இந்துமதி
பக்கங்கள்          : 64
விலை                 : ரூ.50/-
வெளியீடு         : வாசகன் பதிப்பகம், சேலம்

           இவ்வுலகம் எங்கெங்கும் அழகானது. அந்த அழகான உலகத்தில் ஒவ்வொன்றும் கவிதையாய் உள்ளது, கவிதையால் நிறைந்துள்ளது. சாமானியர்கள் அதை சகஜமான காட்சியென கடந்து செல்கையில், கவிஉள்ளம் படைத்தவர்கள், கவிக்கண் கொண்டு  அவற்றை நோக்கி, கவிதையாய் வடித்து இவ்வுலகிற்கு படைப்பாய் பரிசளிக்கிறார்கள்.

                சாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அவரவர் திறமைகளுக்கேற்ப அவரவருக்கான துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முனைந்து செயலாற்றி வருகிறார்கள். அத்தகைய சாதிக்கும் உத்வேகத்துடன், எழுத்துத் துறையை தனக்கான களமாய் கொண்டு தன் முதல் கவிதைத் தொகுப்போடு இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார் கவிஞர் இந்துமதி.

         உழைப்பின் பரிசை உழைப்பாளிகளுக்கு வழங்குபவை வியர்வைத் துளிகள். “வியர்வைத் துளிகள்” என்னும் கவிதையில், உழைப்பின் விளைவாய் மேனியெங்கும் பூக்கும் வியர்வைப் பூக்களை மார்கழி மாதத்தில் பூக்கும் பனிப்பூக்களோடு ஒப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
                “உழைப்பின் தவத்தால்
                மலரும்
                மார்கழி மாத
                பனிப்பூக்கள்”

                எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வானத்தைப் போல், எல்லோரையும் பொதுவாக கருதி இவ்வுலகில் பேதமில்லாது பெய்வது மழை. அத்தகைய மழை மனிதர்களில் பேதம் பார்க்காது, சமத்துவத்துடன் நடந்து கொள்கிறது என்பதை “சமத்துவக் குளியல்” என்னும் கவிதையில் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
                “இதோ ஒரு சமத்துவக் குளியல்
                உயிருள்ள மனிதர்களும்
                உயிரற்ற பொருட்களும்…
                கொட்டும் மழையில்!”

                குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையை ரசிக்காதவர்களில்லை. மழையும் மழைக்காலமும் ரசனைக்குரியவை. மழை நிலத்தை நனைப்பதைப்போல, மனதை ஆனந்தத்தால் நனைக்கவல்லது என்பதை “மழைத்துளி” என்ற தலைப்பிலான தன் இன்னொரு கவிதையில் கூறுகிறார் கவிஞர்.
                “வந்து விழுந்தவுடன்
                மண்ணைப் போன்றே                  
                நனைத்து விடுகிறது
                மனதையும்
                ஆனந்தத்தால்…”

                இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை கண்டறிந்து, அதன் இலக்கை அடைய உயிர்கள் முயல வேண்டும். அப்போது தான் வாழ்தல் அர்த்தமுள்ளதாகும். அந்த வகையில் மரிப்பதை மறந்து முகம் மலர்ந்து மலர்கள் மணம் வீசுகின்றன என்று மலர்களின் வாழ்தலை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறார் கவிஞர்.
                “மண்ணில் பிறந்து
                மரிப்பதை மறந்து
                மாசில்லாமல்
                மணம் கமழ வாழும்
                மனித பிம்பங்கள்…”

                கவிதைக்கு அழகு கற்பனை. அந்த கற்பனையின் அழகியலில் தான் கவிதை அழகாகிறது. “குடை” என்னும் கவிதையில் குடையை தொட்டாற்சிணுங்கியாக்கி, நிழலைக் கண்டால் குடை சுருங்குவதை தொட்டாற்சிணுங்கியோடு ஒப்பிட்டு, தன் கற்பனையால் கவிதைக்கு மெருகூட்டியிருக்கிறார் கவிஞர்.
                “வெயிலுடனும்
                மழையுடனும்
                ஒட்டி உரசி விளையாடுபவன்…
                ஏனோ…
                நிழலைக் கண்டாலே
                தொட்டாற்சிணுங்கியாகிவிடுகிறான்”

                கவிஞரின் கற்பனையை நமக்கு உணர்த்தும் இன்னொரு கவிதையாய் மலர்கிறது ஜன்னல் குறித்த கவிதை. “ஜன்னலோர வேடிக்கை” என்ற தலைப்பில் ஜன்னலோரம் பார்க்கும் காட்சிகள் இவ்வுலகை யதார்த்த சினிமாவாய் கண்முன் கொணர்கிறது என்கிறார் கவிஞர்.
                “சாமானியர்களின்
                அன்றாட வாழ்க்கையை
                எடுத்துரைக்கும்
                யதார்த்த சினிமா”

         “மிக எளிமையாக ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையோடு தொடர்புள்ள விஷயங்களைத் தொட்டு அவற்றின் இயல்பைச் சிதைக்காமல் சுமந்தபடி, நிதர்சனங்களைச் சுட்டிக்காட்டியபடி செல்கின்றன கவிஞர் ச.இந்துமதியின் மனதோடு மழைச்சாரல் நூலினுடைய அனைத்துக் கவிதைகளும்” என்று நூலின் அணிந்துரையில் பாவையர் மலர் இதழாசிரியர் – எழுத்தாளர் முனைவர் ம. வான்மதி அவர்கள் கூறியிருப்பதைப் போல, அன்றாட வாழ்வின் அம்சங்களை அதன் இயல்பை சிதைக்காமல் கவிதையாய் நம் கண்முன் கொணர்கின்றன கவிஞர் இந்துமதியின் கவிதைகள்.

        நூலின் எல்லாக் கவிதைகளும் விடுகதைத் தொனியில் இருப்பதும், தலைப்பை கொண்டே கவிதைகளை புரிந்து கொள்ளும் நிலையிலிருப்பதும் நூலின் வாசிப்பை சற்றே தொய்வாக்குகின்றன. எனினும், கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற முறையில் இந்நூல் சிறப்பாக வெளிவந்து அவரின் எழுத்துலக பிரவேசத்திற்கு அடித்தளமிட்டிருக்கிறது எனலாம்.

நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

Monday, 4 December 2017



முட்டை பொம்மை

நூல்                       : முட்டை பொம்மை
ஆசிரியர்             : வேம்பார் ச.வள்ளுவன்
வெளியீடு         : வேம்பு மாணாக்கர் வாசிப்பு இயக்கம், விளாத்திகுளம்
பக்கம்                 : 32
விலை                 : ரூ. 15 /-

                குழந்தைகளின் உலகம் அலாதியானது. அந்த அலாதியான உலகம் கட்டுக்கடங்கா கற்பனையால் நிறைந்தது. அந்த கற்பனையை மேம்படுத்தி, குழந்தைகளின் சிந்தனைகளை அடுத்தநிலை நோக்கி இட்டுச்செல்ல்லும் ஆற்றல் கதைகளுக்குண்டு.

                அண்மைக்காலமாக சிறுவர் கதைகள் வருவது குறைந்து வருகிறது. இந்நிலையை போக்கும் விதத்தில் இனிதே மலர்ந்துள்ளது வேம்பு மாணாக்கர் வாசிப்பு இயக்கம் வெளியீட்டில் வெளிவந்துள்ள வேம்பார் ச.வள்ளுவன் அவர்களின் முட்டை பொம்மை.

                தனது கல்விப்பணிக்காக 2014ஆம் ஆண்டு தினமலர் நாளிதழால் வழங்கப்பட்ட ‘இலட்சிய ஆசிரியர்’ விருது, தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய ‘ஆசிர்யர் செம்மல்’ விருது, தென்னிந்திய கலாச்சார அகாடமி வழங்கிய ‘சேவா ரத்னா’ விருது என பல விருதுகளால் கெளரவிக்கப்பட்டவர் நூலாசிரியர். பல்வேறு சிற்றிதழ்கள், வார-மாத இதழ்கள், மின்னிதழ்களில் படைப்புகளை எழுதி வரும் இனிய படைப்பாளர் நூலாசிரியர் வேம்பார் ச.வள்ளுவன் அவர்கள்.

                சிறுவர்களுக்கான ஏழு கதைகளுடன் 32 பக்க அளவில் இனிதே மலர்ந்துள்ளது இந்த முட்டை பொம்மை நூல்.

                மாறன் தன் பள்ளியில் நடக்கும் கண்காட்சிக்கு, தானே செய்த முட்டை பொம்மையை கொண்டு சென்று பரிசு பெற்ற “முட்டை பொம்மை” கதையே இந்நூலின் முதல் கதை. “வயதானவங்கக அறிவுப் பெட்டகம். அவங்க அனுபவத்துல இருந்து நமக்கு பல ஐடியாக்கள் தருவாங்க. யாரும் கேட்பதில்லை. கேட்ட நீ ஜெயிச்சுட்டே” என்று கதையின் நீதியாக பெரியோரின் அறிவுரையே கேட்க இனிதே வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.

                குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்ற இனிய நீதியை எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்க்கும் ரமேஷின் கதாபாத்திரத்தின் வழி, நெஞ்சில் நிலைநிறுத்துகிறார் நூலாசிரியர். இதே கதையில் யாரையும் ஏளனப்படுத்தக் கூடாது, ஆபத்தில் உதவும் நல்ல உள்ளங்களே நம் நல்ல நண்பர்கள் என்னும் நீதிகளையும் இழையோட விட்டிருப்பது சிறப்பு.

                செல்போன், கணினி போன்ற சாதனங்கள் மனிதர்களின் நேரத்தை விழுங்கிவருவது எல்லோரும் அறிந்ததே. அதிலும் செல்போன் விளையாட்டுகளில் தங்களை தொலைக்கும் குழந்தைகளின் நிலையோ இன்னும் அதிகம். அத்தகையை செல்போன், கணினியில் நாம் அதிக நேரம் செலவிடக்கூடாது என்பதை காட்டுக்குள் வாழும் மாருதியின் வழியாக நம் கண் முன் கொண்டுவருகிறார் எழுத்தாளர் வேம்பார் ச.வள்ளுவன் அவர்கள்.

                “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை” என்கிறது திருக்குறள். இன்றைய குழந்தைகள் பெரியவர்களைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்களாக இருப்பது எல்லோரும் அறிந்த கண்கூடு. அத்தகைய அறிவிற் சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனங்கண்டு பாராட்ட வேண்டும் என்ற நற்கருத்தை கண்முன் கொண்ர்ந்து, பெரியோரின்  அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும் என்ற நீதியையும் சொல்கிறது பூங்கா தாத்தா கதை.

                நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு எந்த குறையும் வராது என்ற நல்ல நீதியை பிரான்சிஸ் என்ற சிறுவன் மூலமாக வாசகர்களுக்கு உணர்த்தும் ஆசிரியர், பெற்றோரின் சூழல் அறிந்து பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.

                தென்னைமரமும் பனைமரமும் சண்டையிடும் கதை. தென்னைமரங்களும், பனைமரங்கும் எந்தெந்த வகையில் நமக்கு பயன் தருகின்றன என்ற பட்டியலை அறிய இந்த கதையே போதும். மேலும் விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற நீதியையும் உணர்த்துகிறது இக்கதை.

                இயற்கையை நேசிக்கும் இனிய மனப்பான்மையை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அப்படி இயற்கையை நேசிக்க ஒவ்வொருவரும் அவர்களால் இயன்றளவு மரங்களை நட்டு வளர்க்கவும், பராமரிக்கவும் செய்ய வேண்டும் என்பதை “மரம் வளர்ப்போம்…!” கதையில் உணர்த்துகிறார் நூலாசிரியர்.

                இந்நூலில் இடம்பெற்றுள்ள ஏழு கதைகளும் ஒரே கல்லில் இரட்டை மாங்காய்கள் என்று சொல்வதை போல், நல்ல நல்ல நீதிகளை சிறுவர்களுக்கு உணர்த்துகின்றன. எளிய மொழிநடை சிறுவர்கள் வாசிக்க எளிதாகவும், அவர்களின் வாசிப்பை மேன்மைப்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.

                விளாத்திகுளம், வேம்பு மாணாக்கர் வாசிப்பு இயக்கம் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, நல்ல நல்ல படைப்புகளை தேடிப்பிடித்து நூலாக வெளியிட்டு நற்பணியாற்றுகிறது. இத்தகைய நற்பணியில் மலர்ந்துள்ள இந்த இனிய நூலை மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த வாங்கி ஆதரவளிப்பது சிறப்பாக அமையும்.

நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்
9790231240

Monday, 9 October 2017

கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்களின்
“இதயம் தொட்ட எழுதுகோல்”




நூல்                        : இதயம் தொட்ட எழுதுகோல்
ஆசிரியர்              : கவிஞர் எம்.எஸ்.வேல்
வெளியீடு           : சபரிமதி வெளியீடு, சேலம்.
பக்கங்கள்           : 80                                                                                                          
விலை                   : ரூ. 50 /-

                எழுதுகோலுக்கும் கவிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கவிஞர்களின் இதயம் பேசும் மொழியை உணர்ந்து அதை தாளில் வார்த்தெடுக்கும் வர்ணஜால வித்தைகளை நிகழ்த்தவல்லது எழுதுகோல். சமுதாயத்தின் வளர்ச்சிக்கான விதைகள் விதைக்கப்படுவது எழுதுகோலால் தான். ஒவ்வொரு படைப்பாளரின் எழுதுகோலும் அவர்தம் எழுத்துகளும் சமுதாயத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றவை. அதனாலேயே படைப்பாளர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறது சமூகம்.

                இத்தகு சிறப்பு வாய்ந்த எழுதுகோலில் தன் எண்ணங்களை மையாக ஊற்றி, இதயத்திலிருந்து எழுதிய கவிதைகளை “இதயம் தொட்ட எழுதுகோலாய்” தமிழுலகிற்கு வழங்கியிருக்கிறார் கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்கள்.

                கவிதைகளை அழகுபடுத்தி நம் நெஞ்சில் நிலைபெற செய்வது கவிஞர்களின் கற்பனையுணர்வு. பூக்கள் என்றாலே தனியழகு தான். பூக்கள் நிறைந்த சோலை மேலும் அழகு. சோலையில் மட்டுமல்ல சேலையில் வலம் வரும் பெண்களும் பூக்களே. இரண்டும் அழகே என்று தன் கற்பனையை வாசகர்களுக்கு விருந்தாக்குகிறார்  கவிஞர்.
                “சோலையில் மட்டுமல்ல
                சேலையிலும் அழகுதான்
                பூக்கள்”
               
                குழந்தைகளை விளையாடவிட வேண்டும், அப்போது தான் அவர்களின் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பலப்படும். அத்தகைய குழந்தைகளில் உடல்குறைபாடு உள்ள குழந்தைகளை எப்படி விளையாட சொல்வது, என்ற தன் இரக்க மனதை கவிதையில் படம்பிடித்து காட்டுகிறார் கவிஞர்
''ஓடிவிளையாடு பாப்பா
கற்பிக்க மனமில்லை
போலியோ குழந்தைகள்''

நகரமயமாதலின் விளைவால் வாகனங்கள் பெருக, காற்று மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. காற்று மாசில்லாமல் இருந்தால் தான் சுற்றுசூழலும் மனிதர்களும் நலமாக இருக்க முடியும். மனிதர்களின் நலன் பேணவும் இயற்கையின் நலன் காக்கவும் கவிஞர் தன் கவிதைகளில் தீர்வுகளை முன்வைத்து நம் நெஞ்சில் நிலைக்கிறார்.
''எரிபொருள் குறை
வெடிபொருள் தவிர்
காத்திடும் காற்றின் கற்பு''

உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது எல்லோரும் அறிந்ததே. இவற்றுள் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைப்பது அரிதாகி வருகிறது. முறையாக பராமரிக்கப்படாத நீர்நிலைகளால் ஆற்று பகுதியில் அவ்வப்போது வெள்ளம் வருவதும், அதில் வீடுகள் அடித்து செல்லபடுவதுமென மக்கள் பெரிதும் துயருறுவதை தன் கவிதைக்கண்  கொண்டு பரிதாபப்படுகிறார் கவிஞர்.
''காட்டாற்று வெள்ளநீரை
அள்ளிப் பருகினேன்
உப்புக்கரித்தது
கலந்தே இருந்தது
வீடு இழந்தோரின்
கண்ணீர்''

''எத்தனை பெரிய மனிதருக்கு எதனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு, எத்தனை பெரிய அறிவிருக்கு'' என்று ‘ஆசைமுகம்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருப்பார். பொருளாதார நிலையிலல்ல, நம் எண்ணங்களிலேயே நம் உயர்வுகள் இருக்கின்றன என்பதை,
''உயர்ந்த மளிகை
தாழ்ந்த நுழைவாயில்
விரட்டப்படும் வறியோர்''
என்று உணர்த்துகிறார் கவிஞர்.

                கற்பனையென்பது கவிஞர்களுக்கு கைவரப்பெற்ற வரம். கற்பனையே கவிஞர்கள் உயர காரணமாகிறது. கவிஞர் தன் கற்பனையை நூலின் பல கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். உதாரணமாக மேகங்களில் தான் கண்ட பிம்பங்களை,
''சற்றுமுன் நான்கண்ட
பெருத்த யானை
மாறியிருந்தது
அழகிய தொகை
விரித்தாடும் மயிலை
அசையும் மேகங்கள்''
என்று கவிதையாக்கியுள்ளார்.

மரத்தின் வளர்ச்சிக்கு வேர்கள் காரணமாய் இருப்பது போல், இந்த உலகில் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறப்புக்கும் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் காரணம் அவர்களின் பெற்றோரே. ஆனால் வாழ்வில் தான் எதிர்பார்த்த நிலையை அடைந்தவுடன் அந்த வளர்ச்சி தன் சுயமுயற்சியால் வந்தது என பெற்றோரை புறந்தள்ளுவோரை தன் கவிதையில் சாடுகிறார் கவிஞர்.
''ஆணிவேராய் தாய் மண்ணிருக்க
அதன் பிடியாய் தந்தையிருக்க
சில அறியாக்கிளைகள்
உதிர்க்கின்றன வார்த்தைகளை
நான் தானை
வளர்ந்த மரமென்று''

''இதயம் தொட்ட எழுதுகோல்'' நூல் சிந்தித்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு என்பதைவிட நான் சந்தித்த நிகழ்வுகளின் தொகுப்பு என்று கூறலாம் - என்று நூலின் என்னுரையில் கவிஞர் கூறியிருப்பதைப்போல், நூலின் கவிதைகள் சமூகத்தையும் கவிஞரின் உள்ளத்தையும் பிரதிபலிக்கின்றன. நூலில் இடம்பெற்ற குறுங்கவிதைகளை காட்டிலும் ஹைக்கூ கவிதைகள் சட்டென இதயத்தில் இடம்பிடிக்கின்றன. ''இதயம் தொட்ட எழுதுகோல்'' கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்களை இலக்கிய உலகில் சாதனையை தொடவைக்கும் ஆரம்பப்புள்ளியாக விளங்குகிறது.

நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத்

சேலம்

Monday, 3 July 2017



ஓலைச்சுவடி முதல்…


உலகோர் வியக்கும்
உன்னத வாழ்வியலை
எல்லோரும் ஏற்கும்படி அளித்து
வாழ்வியல் நெறி வகுத்த குறள்…!

இல்லம் தேடி வருவோரை
பூத்து குலுங்கும் மலராய்
புன்னகை படரும் முகத்துடன்
இன்முகம் காட்டி உபசரிக்கும்
உன்னத விருந்தோம்பல்…!

எதிர்த்து வரும் பகைவரை
துணிந்து நின்று
நெஞ்சுயர்த்தி வீழ்த்தி
உயர்ந்து நிற்கும்
புறம் பேசும் வீரம்…!

மனங்களுக்குள் மலர்ந்த
மகத்தான நேசத்தால்
மண்ணில் வரலாறாய் பதிந்திருக்கும்
அகம் பேசும் காதல்…!

காலங்கள் பல கடந்தும்
வளம் குன்றாது
இளமை மங்காது
உயர்ந்து நிற்கும் உன்னத மொழியாய் தமிழ்…!

நீளும் பட்டியலில்
தொடர்ச்சியாய் தடம் பதிக்கின்றன
தமிழனின் பெருமைகள்
ஓலைச்சுவடி முதல்
புகழை சுமந்தபடி…!

கவிஞர் ச.கோபிநாத்
சேலம்


நன்றி - தினமணி கவிதைமணி


மறுஜென்மம்

திக்குத் தெரியாதக் காட்டில்
அலைவதை போல்
இலக்கு தெரியாமல்
நாளும் அலைகிறது
இலக்குகளை இழந்த மனம்.

கண்முன் தென்படும்
பாதைகள் அனைத்தும்
இலக்கு நோக்கு இட்டுச்செல்லும்
என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு கணமும்
நீள்கிறது தேடல்.

நீளும் பாதையில்
மனம் முழுக்க
எதிர்பார்ப்பை சுமந்து
தொடரும் பயணத்தின் முடிவாய்
கண்முன் விரிகிறது
முற்றுப்பெற்ற
மற்றுமோர் சூன்யமான சூழல்.

இருள்சூழ்ந்த வெளியில்
இலக்கு நோக்கிய
பயணத்தின் துணையாய்
மனமெங்கும் நம்பிக்கை படர
ஒளியை நோக்கி இட்டுச்செல்லும்
பாதை மனதுக்குள் விரிகிறது
மறுஜென்மம் ஒன்றை பரிசளித்தபடி.

கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

நன்றி – தினமணி கவிதைமணி








கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
ச.கோபிநாத்

பெரும்பரப்பாய் உலகெங்கும் விரியும்
தமிழ்க் கவிதை வானில்
பிறைநிலவாய் தோன்றிய
கவிதை நிலா!

விருட்சத்தை பிரசவிக்கும்
‘விதையாய் விழுந்தவன்’ - இவர்
‘முத்தமிழின் முகவரி’!

தமிழ்க் கவிதையுலகெனும்
‘பால்வீதி’யில் வலம் வந்து
‘சுட்டுவிரல்’ காட்டியபடி
‘நிலவிலிருந்து வந்தவன்’.

‘கரைகளே நதியாவதில்லை”யென
நிதர்சனம் பேசி
‘நேயர் விருப்பம்’ தனை நிறைவேற்றிய
‘ரகசிய பூ’.

‘எம்மொழி செம்மொழி’
என்ற பெருமிதத்துடன்
‘தட்டாதே திறந்திருக்கிறது’
என இளையவர்களை
ஊக்குவித்த உந்துசக்தி!

‘நெருப்பை அணைக்கும் நெருப்பாய்’
சுடர்விட்ட இவருக்கு
‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’.

‘பாலைநிலா’வாய் இருக்கும்
தமிழ்க்கவிதையுலகிற்கு
இனி இவரின் கவிதைகளே ‘தேவகானம்’.

கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

குறிப்பு:
·        ‘…’ – இக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளவை கவிக்கோ அவர்களின் நூல்கள்.


நன்றி – தினமணி - கவிதைமணி

குழந்தையின் குரல்

எதிர்பார்ப்புகள் சூழ
அன்பின் கரம்பிடித்து
தாயின் கருவறையில்
அரவணைப்பாய் இருந்ததில்
எனை சூழ்ந்திருந்தது பாதுகாப்பு.

மனிதர்கள் சூழ்ந்த இப்புவியில்
பிறந்த நிமிடம் முதல்
குரல்வளையை இறுக்குகிறது
எங்கும் சூழ்ந்திருக்கும் மாசு.

மேனிதீண்டும் செயற்கைக்காற்று
நாசிக்குள் நச்சரிக்க
மனதுக்குள் ஏக்கத்தை விதைக்கிறது
இயற்கை காற்று மீதான எதிர்பார்ப்பு.

பொய்த்த வானம்
பெய்ய மறுக்கும் மழையால்
நிலமும் மக்களும்
ஏங்கி கிடக்கும் இந்நாட்களில்
தொண்டையை நெரிக்கிறது தீராத்தாகம்.

பேராசை பெருக்கெடுத்த
மனிதர்களின் எண்ணத்தால்
இருண்டு கிடக்கும் எதிர்காலத்தை மாற்றி
எனை போன்றே
எதிர்வரும் தலைமுறையினரும்
இனிதே வாழ
இனியாவது நடுங்கள்
ஆளுக்கொரு மரத்தை.

கவிஞர் ச.கோபிநாத்

சேலம்

நன்றி-தினமணி - கவிதைமணி


சுகங்களும் சுமைகளும்

மனமெங்கும் வியாபிக்கும்
அர்த்தமிகு அன்பால்
மொட்டாய் முகிழ்த்து
மலராய் விரிகிறது நேசம்.

திக்கெட்டும் பரவும்
பூக்களின் மணமென
மனிதர்கள் மீதான
அக்கறை ஊற்றெடுக்க
அன்பின் மழையால்
நனைகின்றன மனங்கள்.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
விட்டுக்கொடுத்தலின்
அர்த்தம் உணர்ந்து
முன்னெடுக்கும் வாழ்க்கையால்
மனங்களில் ஆழப்பதிகின்றன
அன்பின் விதைகள்.

வாழ்வின் எல்லாமுமாய்
நட்பும் உறவும் சங்கமிக்க
சுகங்களின் சுவடுகளாய் மலர்ந்து
ஆனந்த மழையில்
நனைய துணைநிற்கின்றன சுமைகள்.

கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

நன்றி – தினமணி - கவிதைமணி


Thursday, 1 June 2017


புத்தக மதிப்புரை
புல்லாங்குழலும் இருபது துளைகளும்…
கவிஞர் ச.கோபிநாத்
நூல்                                       : புல்லாங்குழலும் இருபது துளைகளும்…
தொகுப்பாசிரியர்            : கவிஞர் சீதா – கவிஞர் மகிழினி
வெளியீடு                           : வாசகன் பதிப்பகம், சேலம்.
பக்கங்கள்                           : 112
விலை                                  : ரூ. 90 /-

                தனித்துப் பூத்திருக்கும் மலரைக் காட்டிலும், மாலையாய்  சங்கமித்த மலர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். தனித்திருக்கும் மூங்கில் உடைபடும் நிலையில், கட்டுகளாய் கட்டப்பட்ட மூங்கில்கள் உடைபடாது உறுதியாய் நிற்கும். இவையே ஒற்றுமையின் பலம்.
                சென்னை பெருவெள்ளத்தின்போதும், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின்போதும் இளைஞர்களின் பேராற்றலை உலகுக்கு உணர்த்த உறுதுணையாய் இருந்தது முகநூல்.
                ஒற்றுமையும் முகநூலும் ஒன்றுபட்டதில் சங்கமித்த கவிஞர்கள் இருபது பேரின் கூட்டுமுயற்சியால் உதயமாகி தமிழ் படைப்புலகில் கவிதைத்தடம் பதிக்க வெளிவந்திருக்கிறது கவிஞர்கள் சீதா – மகிழினி அவர்கள் தொகுப்பித்த “புல்லாங்குழலும் இருபது துளைகளும்…” கவிதை நூல்.
                முற்றுப்புள்ளிகளோடு கவிதைகள் முற்றுப் பெறுவதில்லை. சொல்ல துடித்து சொல்ல இயலாமல் போன சொற்களாலான வாக்கியங்கள் இரு முற்றுப்புள்ளிகளுக்கிடையே வெளிவர இயலாமல் திணறுகின்றன என்ற கவிஞர்களின் மனக்காட்சியை வாசகர்களின் கண்முன் கொணர்கிறார் கவிஞர் வெ.சுப்ரமணியன் அவர்கள்.
“இரண்டு முற்றுப் புள்ளிகளுக்கு நடுவே
மூர்ச்சையாகிக் கிடக்கின்றன, சொல்ல முயன்று
தோற்றுப் போன வாக்கியங்கள்”.

இன்றைய சூழலில், மகளைப் பெற்றெடுக்க தாயும் தந்தையும் இழக்க வேண்டியவை ஏராளமாய் இருக்கின்றன. தாயும் தந்தையும் தெளிவாய் இருந்தாலும் சமூகம் விடுவதாயில்லை. இத்தகையை சூழலிலும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கேத் தெரியும் அவர்கள் தேவதையை குழந்தையாய் பெற்றிருப்பது. இத்தகைய தாயின் மனநிலையை தன் கவிதையில் கண்முன் கொணர்கிறார் கவிஞர் இந்து சம்யுக்தா அவர்கள்.
“இழந்தவை அதிகமெனினும்
‘பெற்றது’ உனை என்பதால்
பெரும் பேறுதான்
எனக்கு…!”

பெண்கள் எல்லோரையும் உயர்த்தி பார்க்கும் மனம் படைத்தவர்கள். தியாகம் பெருக்கெடுக்க தன்னலம் பாராமல் தன் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்கள் வலிகளை தான் சுமந்தாலும் வசந்தத்தை பிறருக்கு பரிசளிப்பவர்கள் என பெண்களின் பெருமையை கவிதையாய் படைத்திருக்கிறார் கவிஞர் முஹம்மது அப்பாஸ் அவர்கள்.
“சந்ததிகளைப் பெற்றெடுத்து சரித்திரங்களை வளர்த்தெடுத்தாய்
சாத்திரங்கள் உடைத்தெறிந்து இன்று சமுத்திரமாய் உருவெடுத்தாய்”.

அயலக வேலையென்பது பொன்னையும் பொருளையும் கொட்டி கொடுத்தாலும், அது கொண்டுபோவதென்னவோ வாழ்வின் சந்தோசங்களைத்தான். வாழ்வை அர்த்தப்படுத்தும் சின்ன சின்ன சந்தோசங்களையும் இழக்கும் அயலக பணியாளர்களின் வலியை கவிதையாய் வார்த்தெடுத்திருக்கிறார்  கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் மாஹின் அவர்கள்.
“தோளில் சுமக்கவேயில்லை தோளுக்குமேல்
வளர்ந்துவிட்டான் இன்றென் அன்பு மகன்”

அறிவியல் வளர்ச்சியாலும் நகரமயமாதலின் விளைவாலும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்வது இப்போது இயல்பாகிவிட்டது. எத்தனை வசதிகள் நகரங்களில் இருந்தாலும், மனதிற்குஇதமளிக்கும் இனியவை நிறைந்திப்பது கிராமங்களில் தான் என்று கிராமங்களின் பெருமையை தன் கவிதையில் உயர்த்திப் பிடித்திருக்கிறார் கவிஞர் து.பிரேம்குமார் அவர்கள்.
“சோடாபுட்டி, பொடிமட்டை, சோனி, கருவாச்சி பட்டபேரு
கூட்டாஞ்சோறு, சல்லிக்கட்டு, கொளத்து நீச்சல், கிளிசோசியம்
பேய்விரட்டு, குலவபாட்டு ஒன்னவிட்டு ஒன்னசொன்னா
ஊர்ப்பெருமை என்னாகும்
பத்துநாள் சொன்னாக்கூட பாதியே முடியாது”

காதல் பலரை கவிஞனாக்கும். காதல் பிரிவோ அவர்களை தத்துவவாதியாக்கும். இதை நிரூபிக்கும் விதத்தில் காதல் பிரிவில் தன் கவிதையை தத்துவமாய் படைத்துள்ளார் கவிஞர் செல்வா அவர்கள்.
“எல்லாருமே சிலகாலம்
ஏதும் நிரந்தரம்ல்ல
எதுவும் நம் சொந்தமல்ல…

தொலைந்ததைத் தேடி
இருப்பதை இழக்க முயலவில்லை”

“நட்சத்திரம்
இது சூரியன் சிந்திய
வியர்வைத் துளிகள்”.
இது கவிஞர் ர.நானகுமார் அவர்களின் கவிதை. கற்பனை என்பது கவிஞர்களுக்கே உரிய தனித்துவம் என்பதை நிரூபிக்கிறது இவரின் இந்தப் படைப்பு.

தனிமை பலருக்கும் பிடித்த ஒன்று. கவிஞனின் தனிமை கவிதையாய் உருமாறும். எனினும் தனிமை வலியே என்று தனித்திருத்தலின் வலியை வார்த்தையால் கொட்டியிருக்கிறார் கவிஞர் ஸ்வேதா சந்திரசேகரன் அவர்கள்.
“ஒரு பக்கம் சாளரம்!!! இன்னொரு பக்கம் கதவு…
மற்ற ரெண்டுபக்கம்  சுவரு! முடிந்தது உலகு…
……………………………………………………………….
கொண்டாட கோடி தினங்கள் இருந்தாலும்
சலிப்பாக்கும் தனிமை…”

சுயநலம் தவிர்த்து பிறர்நலம் பேணுவதே நமக்கு நல்ல இதயங்களை பரிசளிக்கும். அத்தகைய வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாய் அமையும் என்று வாழ்தலின் பொருளை தன் கவிதையில் பட்டியலிடுகிறார் கவிஞர் அ.அந்தோணி குருஸ் அவர்கள்.
“தனக்குத் தனக்கு என்று வாழ்ந்தால் தரம் தாழ்ந்து விடுவாய்
தன்னை மறந்து பிறருக்காக வாழ்ந்து பார்
என்றுமே உயர்ந்து நிற்பாய்”

                “வானுயுரே பறந்திட்டேன்
                கருடன் எனவே கும்பிட்டீர்
                வகைதெரியா இறுமாப்பு வந்ததென் மண்டையிலே
                கனத்தின் கனம் தாளாமல் கவிழ்ந்ததென் தலை கீழே
                இழுத்ததென்ன புவிஈர்ப்பா
                மோதியழிந்தேன் பாறையிலே…!”
                என்று வாழ்வில் வெற்றி பெறுவோர் எல்லாரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய பாடத்தை கவிதையாய் படைத்திருக்கிறார் கவிஞர் இரா.பிரபுலிங்கம் அவர்கள். தலைக்கனம் மனிதனின் எத்தகைய வளர்ச்சியையும் அழிக்கவல்லது என்பதை உணரவைக்கிறார் கவிஞர்.

                 “அவன் வியர்வையில் விளைந்ததெல்லாம் பொதுவுடைமை
                விலையில்லா அரிசி மட்டுமே அவனுக்கு தனியுடைமை”
                என்று விவசாயிகளின் கண்ணீர் கதையை கண்முன் கொணர்கிறார் கவிஞர் குகன் (எ) தாமோதரன் அவர்கள். விவசாயிகளின் நிலையையும் விவசாயத்தின் நிலையையும் கூறி இன்றைய சூழலில் வேளாண்மை படும்பாட்டையும் எடுத்துக்காட்டி எதிர்காலத்தை எண்ணி எச்சரித்திருக்கிறார்.

                நல்ல கவிதை மொழியில் தன் எண்ணத்தை முன்வைக்கும் கவிஞர் ராஜி தன் கவிதை நடையால் தனித்துவமாய் தெரிகிறார். காட்சிப்படுத்துதலும், யதார்த்தப் பதிவுகளை கவிதையாக்குவதும் இவருக்கு கைவசமாகியிருக்கிறது என்பதற்கு இவரது கவிதைகளே சான்று.
                “ஒரு கனவை செதுக்க ஆரம்பிக்கிறேன்
                ஒரு குழந்தையொருத்தி கடற்கரை
                மணலில் சிற்பம் செதுக்குகிறாள்”

                சமூகம் வகுத்த எல்லைகளுக்குள் முடங்கிப் போன பெண்கள், தங்களின் சுயம் அறியாது இருக்கும் நிலையை கடந்து வர துணிச்சல் ஒன்றே அருமருந்து என்று பெண்ணிய கருத்துகளை தன் கவிதையெங்கும் படரவிட்டிருக்கிறார் கவிஞர் அருணா சுரேஸ் கந்தசாமி அவர்கள்.
                “விடியல்கள் அறியாதிருந்தேன்
                விடிந்ததுமே இருளிலிருந்தேன் உலகம்
                படிக்காத பெண்ணாயிருந்தேன்
                வாசல் படிகூடத் தாண்டாதிருந்தேன்              
                இன்று என்னை அறிந்து கண்டேன்
                எதற்குமே துணிந்து கொண்டேன்”

                பேசுவதும், பேசிக் கொண்டேயிருப்பதும் காதலோடு இரண்டற கலந்தது. எது குறித்தும் பேசுவதும், தன் இணை பேசுவதை ரசிப்பதும் காதலின் அழகு. இந்த சிந்தனையை ரசனை கலந்த கவிதையாய் படைத்திருக்கிறார் கவிஞர் சிவகாமி அவர்கள்.
                “நான் ‘ம்ம்’ சொல்லி ரசிப்பதற்காகவே
                நீளமான கதை சொல்கிறான்
                மடியில் தலைவைத்து
                கதை கேட்கும் போதெல்லாம்…”

                தேர்ந்த சொல்லாடல்களுடன் இளமை ததும்பும் கருத்துகளை கவிதைகளாக்கியிருக்கிறார் இளங்கவிஞர் சர்வேஷ்.இரா அவர்கள்.

                நட்பு வாழ்வை மாற்றும் வல்லமை பெற்றது. நல்ல நட்பு வாழ்வை வசந்தமாக்கும் வரம் வாய்க்கப் பெற்றது. தாய், தந்தை, சகோதரன், சகோதரி இவர்களிடமில்லாத ஒரு பிணைப்பை நண்பர்களிடம் பெற முடியும் என்கிறார்  கவிஞர் பெலிக்ஸ் பெமினியன் அவர்கள்.
                “தாயிடம் சொல்ல முடியாமல்
                வரும் பிரச்சனைகளையும்
                தந்தையிடம் பெற இயலாமல்
                போகும் தேவைகளையும்
                சகோதரன் உறவு இல்லாமல்
                ஏங்கும் ஏக்கத்தையும்
                சகோதரி வழிகாட்டி இல்லாமல்
                வரும் இன்னல்களையும்
                இவை அனைத்தையும்
                ஒருவரிடம் மட்டுமே பெற முடியும்
                அவனே உறவினும் இனிய என் தோழன்!”

                தமிழ்மொழி மொழியாய் மட்டுமின்றி வாழ்வின் அறம் பேசும் வழியாகவும் இருப்பதே அதன் இயல்பு. புவியில் உயர்ந்த மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை தன் கவிதை வழி உயர்த்திப்பிடித்திருக்கிறார் கவிஞர் சிவதர்சினி ராகவன் அவர்கள்.
                “ஒளவை வள்ளுவர் வாய்மை சொல்லி
                வாழும் வழி நூறு அள்ளி வேகம்கொண்ட புயலாக
                புலிவீரர் செய்த தியாகம் சொல்லி மலர்ந்தவளே உனை
                அள்ளி மகிழும் மனதோரம் சாரல் வீசுமே…”
               
                வார்த்தைகள் மாபெரும் வல்லமை பெற்றவை. வார்த்தைகளால் தான் வரலாறுகள் உருவாகின்றன. அத்தகைய வார்த்தைகளின் வலிமையால் உருவானவையே ஹைக்கூ வடிவக்கவிதைகள். தன் ஹைக்கூ கவிதைகளில் வறுமையின் வலியை வாசகர்கள் உணரும் வண்ணம் படைத்திருக்கிறார் கவிஞர் மகிழினி காந்தன் அவர்கள்.
                “சாண்வயிற்றுக்காய்
                முழம் நீளும் கைகளில்
                பசிரேகைகள்”

                அழகியல் கவிதையை அழகாக்கும். வாசிப்பை நேசிக்கத் தூண்டும். வாழ்வின் சின்ன சின்ன நிகழ்வுகளில் உள்ள அழகியலை ரசிப்பதே வாழ்வை அழகாக்கும். அத்தகைய அழகியல் பார்வையால் பளிச்சிடுகிறது கவிஞர் சீதா ஷாம்குமார் அவர்களின் கவிதை. வறுமையையும் மீறி வீட்டில் விழும் மழைத்துளிகளை தோரணங்களாக்கி அழகு பார்க்கிறது இவரது கவிமனது.
                “ஏழை வீட்டுக் கூரைகளின்
                அலங்காரத் தோரணங்கள்           
                மழைத் துளிகள்.”

                வித்தியாசமான சிந்தனைகளே கவிதையை காலம் கடந்தும் நிலைநிறுத்தும். அந்த சிந்தனை சமூகத்துக்கும் நலம் பயக்குமெனில் இன்னும் சிறப்பு. எல்லோரும் ஏளனமாய் பார்க்கும் திருநங்கைகளின் வாழ்வை அவர்களின் வலியை உணர்ந்து அணுகியிருக்கிறார் கவிஞர் நதனிகா ராய் அவர்கள்.
                “செய்கூலி அதிகம் இல்லை
                சேதாரம் நிறைய உண்டு
                எங்கள் வாழ்க்கையில் இப்படிக்கு….
                திருநங்கை(கள்).

                வாசகன் பதிப்பக வெளியீட்டில் கவிஞர்கள் சீதா, மகிழினி ஆகியோரது முயற்சியில் இருபது கவிஞர்களின் சிந்தனைகளையும் ஒருசேர வாசிக்கும் வாசிப்பு அனுபவத்தை இந்த தொகுப்பு தருகிறது.

                “ஒரு புல்லாங்குழலின் இருபது துளைகளும் இருபது விதமான ஓசைகளினை செவியிட்டு செல்கின்றன. இந்த இசை வாசக மனங்களைத் தூங்க வைக்கும். துணிய வைக்கும். எழ வைக்கும். ஏற்றம் காண வைக்கும்” என்று அணிந்துரையில் செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி அவர்கள் கூறிய வார்த்தைகள் நிதர்சனம் என்பது புலனாகிறது.

                தொடர்ந்து எழுதுவதும், எழுதுவதை பல முறை படித்து செதுக்குவதும், பிறமொழி கலப்பை தவிர்ப்பதும் என குறும்பட இயக்குநர் எழில் அவர்கள் கூறிய வழிகாட்டலை இக்கவிஞர்கள் பின்பற்றினால் தமிழ் படைப்புலகில் முத்திரை படைக்கும் படைப்புகளை தரலாம். சிகரம் எட்டும் சாதனைகளைப் படைக்கலாம்.

மதிப்புரை
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்