வடலிமரம்
நூல் :
வடலிமரம்
ஆசிரியர் : ஐரேனிபுரம் பால்ராசய்யா
காதல், எல்லோருக்கும் பிடித்தமான ஓர் சொல். ஒரு
கணம் எல்லோரையும் மயக்கத்தில் ஆழ்த்தி, மந்திரப்புன்னகை பூக்கச் செய்யும், அற்புத
நினைவுகளை நிழலாட செய்யும் ஓர் மந்திரச்சொல் - காதல். எல்லோரும் தங்கள் வாழ்வில் கடந்துவரும் காதலையே மையப்பொருளாகக்
கொண்ட அற்புதக் கதைக்களமே வடலிமரம் நாவலின் கதைக்கரு.
கிராமத்துப் பின்னணியில் நாயகன் அனந்தகிருஷ்ணன், நாயகி சொர்ணா
இவர்களோடு வடலிமரமும் ஒரு கதாபாத்திரமாக இழையோடி வருவது கதையை இயற்கை சார்ந்து
நகர்த்தி செல்கிறது. பள்ளிப்பருவத்தில் காதல் வருவது இயல்பென்றாலும் குடும்ப சூழலை
முன்னிறுத்தி சொர்ணாவுக்கு அறிவுரை கூறும் ஆசிரியர் கதாபாத்திரமும் அறிவுரை கூறும்
நிகழ்வும் யதார்த்தம்.
அறிவுரை ஏற்று
நடக்க முடியாமல் காதலுக்கும் படிப்புக்கும் இடையே ஊசலாடும் தன் மனதை கட்டுப்படுத்த
முடியாமல் தவிக்கும் சொர்ணாவின் தவிப்பு வாசகர்களையும் ஒட்டிக் கொள்கிறது. சொர்ணாவை
கரம்பிடித்து காதலில் வெற்றி காண தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் நாயகன்
அனந்தகிருஷ்ணன் நிகழ்கால வாழ்வின் இளைஞர்களின் பிரதிபலிப்பாகவே திகழ்கிறார்.
கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு படைக்கப்பட்டிருப்பதும் அவை தெளிவான
கதையோட்டத்தில் வலம் வருவதும் நாவலுக்கு வலு சேர்க்கிறது.
நாவலெங்கும்
வலம்வரும் வட்டார வழக்கு சொற்கள் வாசகர்களுக்கு மொழிச்சுவையை ஊட்டுகிறது. காட்சிகள்
அழகாக வரிசைப்படுத்தப்பட்டிருப்பது திரைப்படம் பார்ப்பதற்கிணையான ரசனையையும்
சுவாரசியத்தையும் ஊட்டி வாசகர்களுக்கு விருந்து படைக்கிறது.
ஒரு பக்கக்
கதைகளின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நாவலாசிரியர் ஐரேனிபுரம்
பால்ராசய்யா வடலிமரம் மூலம் தன்னை சிறந்த எழுத்தாளராக வாசகர்களின் மனதில்
நிலைநிறுத்தியுள்ளார். நாவலாசிரியர் தொடர்ந்து சிக்ரம் தொட வாழ்த்துகள்

thanks
ReplyDelete