Friday, 9 December 2016



கவிஞர் கோ.இராஜசேகர் அவர்களின்
“வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்”
நூல்                       : வேடிக்கப் பார்க்கிறான் மனிதன்
ஆசிரியர்              : கவிஞர் கோ.இராஜசேகர்
வெளியீடு           : வாசகன் பதிப்பகம், சேலம்.
பக்கங்கள்           : 64                                                                                                          
விலை                  : ரூ. 50 /-

துள்ளலும் துடிப்பும் நிறைந்தது இளமைப்பருவம். இந்த துள்ளலும் துடிப்பும் இளைஞர்களை உந்தும் உந்துசக்தியாகவும் திகழ்கிறது. இந்த உந்துசக்தியை நல்லவற்றை நோக்கி செலுத்தும் இளைஞர்கள், சாதனையாளர்களாகவும், பொழுதுபோக்கிற்காக செலவழிப்பவர்கள் சாமானியர்களாகவும் சமூகத்தில் வலம் வருகிறார்கள்.

சாமானிய இளைஞர்களிலிருந்து சாதனையாளனாய் தன்னை உயர்த்திக் கொள்ள ஆசைப்படும் இளைஞர்களுள், கவிதையை தனது ஆயுதமாய் ஏந்தி “வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்” என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்போடு இலக்கிய உலகிற்கு வருகை தந்திருக்கிறார் கவிஞர் கோ.இராஜசேகர்.

சமூக நோக்கமும் பண்பாட்டை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணமும் கவிஞர் கோ.இராஜசேகர் அவர்களிடம் நிறைந்திருப்பதை அவரின் பெரும்பாலான கவிதைகள் உணர்த்துகின்றன.

இன்றைய பெற்றோர்கள், குழந்தைகளை பெற்றெடுக்க கவனம் செலுத்துவதைப் போன்றே அவர்களை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைக்காட்டிலும் அவர்களின் பெற்றோரே மிகுந்த பதட்டத்துடனும் திட்டமிடல்களுடனும் கனவுகளை சுமந்து காத்திருக்கின்றனர். இதை,
“அவளுக்கு
மீண்டும் ஒருமுறை
பிரசவ வலி…
மகனின்
தேர்வு முடிவு…!”
என்று நயம்பட சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.

ஒரு காட்சியை சாமானியர்கள் பார்ப்பதற்கும் கவிஞர்கள் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. சாமானியர்கள் காட்சிகளாய் பார்த்து கடந்து செல்வதை, கவிஞர்கள் தங்களின் வித்தியாசமானப் பார்வையால் கவனிக்கச் செய்கின்றனர். கவிஞர்களுக்கே உரித்தான அழகியல் பார்வையை வித்தியாசமாக பதிவு செய்யும் கவிஞரின் பார்வைக்கு இக்கவிதை ஓர் எடுத்துக்காட்டு.
“எத்தனை
புள்ளிக்கோலமென்று
தெரியவில்லை
உன் முகப்பருக்கள்…”

வேலையில்லா திண்டாட்டத்துக்குமிடையே எப்படியாவது ஒரு நல்ல வேலை கிடைத்துவிட வேண்டுமென இன்றைய இளைஞர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அரசுப்பணிகளைப் பெற இளைஞர்கள் பயிற்சி மையங்களை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது. பயிற்சி மையங்களைக் காட்டிலும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்தும் நூல்களில் உள்ளது என்பதை திறம்பட தன் கவிதையில் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர் கோ.இராஜசேகர் அவர்கள்.
“ஊரில் பொது நூலகம்
அனைத்து
இருக்கைகளும்
காலியாக இருக்கிறது…

மாதம்
பல ஆயிரம் வசூலிக்கும்
பயிற்சி மையங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன…!”

எள்ளலும் நகைச்சுவையும் கவிதைகளில் இழையோடுவது வாசகர்களின் வாசிப்பை மேலும் சுவாரசியமாக்கும். சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். பரபரப்பான இன்றைய உலகில் தங்கள் அன்றாட பணிகளுக்கிடையே மனிதர்கள் சிரிப்பதற்கு கூட மறக்க வைத்துவிடுகிறது இன்றைய சூழல். இதில் சீப்பிலிருக்கும் பல்லையும் சிரிப்பையும் இணைத்து எள்ளல்சுவையை தன் கவிதை வழி முன்வைக்கிறார் கவிதை.
“எப்பொழுதும்
சிரித்த முகத்துடன்
பல்லைக் காட்டிக்கொண்டே
இருப்பதால்தான்
அனைவருக்கும்
பிடித்துப்போகிறது
சீப்பை…!”

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ஆரோக்கியமான உணவுகளையும் ஒதுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சுவையாலும் நிறத்தாலும் குழந்தைகளை ஈர்க்கும் துரித உணவுகளும் உண்பதற்கு தயார் நிலையில் கிடைக்கும் உணவுகளும் ஆரோக்கியமானதல்ல என்று அறிந்தும் அதையே விரும்பி உண்கின்றனர். இதை,
“குழந்தைகளின் காலம்
மாறிவிட்டது
மண்ணில் விழுந்த
பொருளை வேண்டாமென்று
ஒதுக்கிய நிலை
கடந்து…
மண்ணில் விளைந்த
உணவையே வேண்டாமென்று
ஒதுக்கும் நிலையாக…”
என்று அழகாக சுட்டிக்காட்டுகிறார்.

“சொட்டும்
நீரில்
இசை
காலிப்பாத்திரம்”
மழையின் ஓசையை இசையாய் ரசிக்கும் கவிஞரின் பார்வையை பதிவு செய்யும் இக்கவிதையில் ஹைக்கூவின் சாயல் தெரிவது இயல்பானதே.

“இளைஞர்களிடம் தென்படும் ஆர்பாட்டம் கோ.இராஜசேகரின் கவிதைகளில் தென்படவில்லை. வார்த்தைகளைச் சூடாக்கும் வெற்று ஆவேசங்கள் எதற்கும் உதவாது என்பதை இந்த இளவயதிலேயே இராஜசேகர் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எனவே அவரது கவிதைகளில் ஆர்பாட்டமில்லாத சாந்தம் குடிகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது” என்று நூலின் அணிந்துரையில் சுட்டிக்காட்டியிருக்கும் முனைவர் கி.பார்த்திபராஜா அவர்களின் வார்த்தைகளை கவிஞர் கோ.இராஜசேகரின் கவிதைகள் உண்மையென உணர்த்துகின்றன.

முதல் தொகுப்பில் முத்திரை பதிக்கும் சிந்தனைகளை கவிதைகளாக வார்த்தெடுத்திருக்கும் கவிஞர் கோ.இராஜசேகர் தன் கவிதைகளின் வாயிலாக அடையாளம் காணப்படும் தூரம் வெகுதொலைவில் இல்லை. இதற்கு இன்னும் அதிக வாசிப்பும், தன் கவிதைகளை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் அவரது முயற்சியுமே அவருக்கு துணையாயிருக்கும். தொடர்ந்து முயன்றால் வெற்றிச் சிகரம் வசப்படும்.

நூல் மதிப்புரை
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

9790231240

No comments:

Post a Comment