நம்பிக்கையும்
நானும்…
(பாகம்-1)
நூல் : நம்பிக்கையும் நானும் (பாகம்-1)
ஆசிரியர் : கவிஞர் ஏகலைவன்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்.
பக்கங்கள் : 160
விலை : ரூ. 100 /-
“அனுபவம் என்பது உனக்கு என்ன நிகழ்கிறது
என்பது அல்ல. அனுபவம் என்பது உன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து நீ என்ன ஏற்றுக்கொள்கிறாய்
என்பதிலேயே உள்ளது” என்கிறது அனுபவம் குறித்த ஆன்றோரின் வாக்கு.
நாம் வாழும் இந்த சமூகத்தில் வாழும்
மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நமக்கு பாடமே. அதிலும் குறிப்பாக வெற்றியாளர்களின்
வாழ்க்கை நமக்கு நல்வழிக்காட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அத்தகைய வெற்றியாளர்களின்
வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடனான நேர்காணலில் பதிவு செய்த கவிஞர் ஏகலைவன் அவர்களின்
நேர்காணல் கட்டுரைத் தொகுப்பாக, வெற்றியாளர்களின் அனுபவத்திரட்டாக மலர்ந்திருக்கிறது
“நம்பிக்கையும் நானும்…(பாகம்-1) நூல்.
எழுத்துச்
செல்வர் லேனா தமிழ்வாணன், தலைமையாசிரியர் மு.ஆ.உதயக்குமார், பிரான்ஸ் தமிழ்ச்சங்கம்
பாரிஸ் ஜமால், சீர்காழி மா.இராமர், பாவையர் மலர் ம.வான்மதி, சமூக ஆர்வலர் ஹரிஹர சுப்ரமணியன்,
கவிமாலைக் கவிஞர் தியாக.இரமேஷ், பன்முகத் திறனாளர் கோபால நாராயணமூர்த்தி, முனைவர் அ.சங்கரலிங்கம்
என ஒன்பது வெற்றியாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த நூல்.
நூலில் இடம்பெற்ற வெற்றியாளர்கள் ஒவ்வொருவரின்
வாழ்க்கையையும் அவர்களது பிறப்பு முதல் தற்கால செயல்பாடுகள் வரையிலான அனைத்துத் தகவல்களையும்
தொகுத்திருப்பது நூலின் தனிச்சிறப்பு. அவர்கள் வாழ்ந்த சூழலும் வெற்றிக்கு தங்களை தயார்படுத்திக்
கொண்ட விதத்தையும் வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்ட விதம் வாசகர்களை வெற்றியை
நோக்கி இட்டுச்செல்லும் கலங்கரை விளக்காக விளங்குகிறது.
வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொண்ட சவால்களை
கடந்துவந்த விதத்தை வாசிக்கும் இளைய தலைமுறை வாசகர்களுக்கு இந்நூல் வரப்பிரசாதமாக விளங்கும்
என்பதில் சிறிதும் ஐயமில்லை.
“எழுத்துலக மார்க்கண்டேயன்” லேனா தமிழ்வாணன்
அவர்கள் எழுத்து, பேச்சு என்று இன்று உலகை வலம் வரும் சாதனையாளர். அவரது முதல் படைப்பை
அவரது தந்தை அமரர் தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு இதழில் இடம்பெற செய்த அனுபவம் குறித்த
பதிவு சுவாரசியமானது. அதிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடத்தை எழுத்துச் செல்வர் லேனா
தமிழ்வாணன் அவர்கள் கூறியிருக்கும் விதத்திலிருந்தே அவரது சாதனைகளுக்கான அடித்தளங்களை
கண்டறிய முடிகின்றது.
சராசரியான தேர்ச்சி விகிதத்தை பெற்று
வந்த பள்ளியை தன் தொடர் முயற்சியாலும் தேர்ந்த திட்டமிடல்களாலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
நூறு சதவிகித தேர்த்தி பெறும் பள்ளியாக உயர்த்திய தலைமையாசிரியர் மு.அ.உதயக்குமார்
அவர்களின் வாழ்க்கை ஒரு நல்ல தேர்ந்த தலைமைக்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
40 ஆண்டுகள் பிரான்ஸில் வாழ்ந்தும்
அந்நாட்டின் குடியுரிமை பெறாமல், திரைக்கடல் ஓடி திரவியம் தேடும் வாழ்வில் தமிழை செழிக்க
செய்து பிரான்ஸில் தமிழ்ச்சங்கம் உருவாக்கியவர்களுள் ஒருவராகவும் விளங்கும் பிரான்ஸ்
தமிழ்ச்சங்கம் பாரிஸ் ஜமால் அவர்களின் வாழ்க்கை சாதாரண மனிதர்களையும் சாதிக்கத் தூண்டும்.
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுடனான தன் உறவை இவர் விளக்கியிருக்கும்
விதம் கடல்கடந்து வாழும் தமிழர்களிடையே இருக்கும் விருந்தோம்பல் பண்புக்கான ஒப்பற்ற
எடுத்துக்காட்டு.
கல்வியே மனிதர்களுக்கு வழங்கப்படும்
செல்வங்களுள் எல்லாம் உயர்ந்தது. அத்தகைய உன்னதமான துறையில் தொடர்ந்து செயலாற்றும்
கல்விச் செயல்பாட்டாளர் சீர்காழி மா.இராமர் அவர்களின் மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வி
சார்ந்த செயல்பாடுகளுக்கான காரணங்களும் இவர் தொழிலதிபராக உயர்ந்த விதமும் எல்லோருக்குமான
இனிய பாடங்கள்.
இல்லத்தரசி, தொழிலதிபர், சமூக ஆர்வலர்,
பத்திரிக்கையாசிரியர், படைப்பாளர் என பன்முகத்தன்மையோடு சமூகப்பணியாற்றியபடி கண்டெய்னர்
தொழிலில் தனிமுத்திரை பதிக்கும் பாவையர் மலர் ம.வான்மதி அவர்களின் வாழ்க்கைப் பயணம்
சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான தேர்ந்த வழிகாட்டுதல்.
சுயநலம் பெருகிவரும் இன்றைய சூழலில்
பிறரின் நிலையறிந்து, அன்புள்ளத்தோடு அனைவருக்கும் உதவும் சேவை மனதோடு செயலாற்றி சமூக
வளர்ச்சிக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் சமூக ஆர்வலர்
ஹரிஹர சுப்ரமணியன் அவர்களின் வாழ்க்கை இம்மண்ணில் இன்னும் இருக்கும் மனிதநேயத்திற்கான
சாட்சியம்.
சிங்கப்பூரில் பணியாற்றியபடி அங்கு
நடக்கும் தமிழ் நிகழ்வுகளை சிங்கப்பூர் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொண்டு
செல்லும் நற்பணியாற்றி வருபவர் கவிமாலைக் கவிஞர் தியாக.இரமேஷ் அவர்கள். சிங்கப்பூருக்கு
வரும் தமிழறிஞர்களை விருந்தோம்பலால் வியக்க வைக்கும் இவரின் செயல்பாடுகள் வெளிநாடுவாழ் தமிழர்கள் தமிழ்மீது
கொண்டிருக்கும் நேசத்தின் குறியீடுகள்.
தன் தொடர் முயற்சிகளால் தமிழாசிரியராய்,
நற்றமிழ் பேச்சாளராக, ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வரும் முனைவர் கோபால நாராயணமூர்த்தி
அவர்களின் வாழ்க்கை தொடர் முயற்சிகள் நற்பலன்களை வழங்கி நம்மை சாதனையாளர்களாய் உயர்த்தும்
என்று உணர்த்துகிறது.
தன் 25 ஆண்டுகால கல்விப்பணியில் பிள்ளைகளின்
வளர்ச்சிக்கு பெற்றோர் செய்ய வேண்டியவை என்ன, ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன
என்பன போன்ற தேர்ந்த வார்த்தைகளால் வழிகாட்டும் முனைவர் அ.சங்கரலிங்கம் அவர்களின் வாழ்க்கை
அனுபவங்கள் எல்லோருக்குமான பாடம்.
ஒவ்வொருவருடைய நேர்காணலின் நிறைவிலும்
அவர்களின் வாழ்க்கை உலகுக்கு சொல்லும் பாடத்தை சுருக்கமாக குறிப்பிட்டிருப்பின் நூல்
மேலும் சிறப்பு பெற்றிருக்கும்.
வெற்றியாளர்களின்
நேர்காணல்களை வாசிக்கும் வாசிப்பனுபவம், அவர்களோடு நேரடியாக பேசும் உணர்வை தருவது நூலின்
தனிச்சிறப்பு. சாதிக்கத் துடிக்கும் சாதனையாளர்களுக்கான வாய்ப்பு வாசலாக இந்நூல் திகழ்கிறது.

No comments:
Post a Comment