Monday, 18 December 2017



நூல் வாசல்
மனதோடு மழைச்சாரல்
கவிஞர் ச.கோபிநாத்
நூல்                       : மனதோடு மழைச்சாரல் (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்             : கவிஞர் இந்துமதி
பக்கங்கள்          : 64
விலை                 : ரூ.50/-
வெளியீடு         : வாசகன் பதிப்பகம், சேலம்

           இவ்வுலகம் எங்கெங்கும் அழகானது. அந்த அழகான உலகத்தில் ஒவ்வொன்றும் கவிதையாய் உள்ளது, கவிதையால் நிறைந்துள்ளது. சாமானியர்கள் அதை சகஜமான காட்சியென கடந்து செல்கையில், கவிஉள்ளம் படைத்தவர்கள், கவிக்கண் கொண்டு  அவற்றை நோக்கி, கவிதையாய் வடித்து இவ்வுலகிற்கு படைப்பாய் பரிசளிக்கிறார்கள்.

                சாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அவரவர் திறமைகளுக்கேற்ப அவரவருக்கான துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முனைந்து செயலாற்றி வருகிறார்கள். அத்தகைய சாதிக்கும் உத்வேகத்துடன், எழுத்துத் துறையை தனக்கான களமாய் கொண்டு தன் முதல் கவிதைத் தொகுப்போடு இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார் கவிஞர் இந்துமதி.

         உழைப்பின் பரிசை உழைப்பாளிகளுக்கு வழங்குபவை வியர்வைத் துளிகள். “வியர்வைத் துளிகள்” என்னும் கவிதையில், உழைப்பின் விளைவாய் மேனியெங்கும் பூக்கும் வியர்வைப் பூக்களை மார்கழி மாதத்தில் பூக்கும் பனிப்பூக்களோடு ஒப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
                “உழைப்பின் தவத்தால்
                மலரும்
                மார்கழி மாத
                பனிப்பூக்கள்”

                எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வானத்தைப் போல், எல்லோரையும் பொதுவாக கருதி இவ்வுலகில் பேதமில்லாது பெய்வது மழை. அத்தகைய மழை மனிதர்களில் பேதம் பார்க்காது, சமத்துவத்துடன் நடந்து கொள்கிறது என்பதை “சமத்துவக் குளியல்” என்னும் கவிதையில் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
                “இதோ ஒரு சமத்துவக் குளியல்
                உயிருள்ள மனிதர்களும்
                உயிரற்ற பொருட்களும்…
                கொட்டும் மழையில்!”

                குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையை ரசிக்காதவர்களில்லை. மழையும் மழைக்காலமும் ரசனைக்குரியவை. மழை நிலத்தை நனைப்பதைப்போல, மனதை ஆனந்தத்தால் நனைக்கவல்லது என்பதை “மழைத்துளி” என்ற தலைப்பிலான தன் இன்னொரு கவிதையில் கூறுகிறார் கவிஞர்.
                “வந்து விழுந்தவுடன்
                மண்ணைப் போன்றே                  
                நனைத்து விடுகிறது
                மனதையும்
                ஆனந்தத்தால்…”

                இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை கண்டறிந்து, அதன் இலக்கை அடைய உயிர்கள் முயல வேண்டும். அப்போது தான் வாழ்தல் அர்த்தமுள்ளதாகும். அந்த வகையில் மரிப்பதை மறந்து முகம் மலர்ந்து மலர்கள் மணம் வீசுகின்றன என்று மலர்களின் வாழ்தலை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறார் கவிஞர்.
                “மண்ணில் பிறந்து
                மரிப்பதை மறந்து
                மாசில்லாமல்
                மணம் கமழ வாழும்
                மனித பிம்பங்கள்…”

                கவிதைக்கு அழகு கற்பனை. அந்த கற்பனையின் அழகியலில் தான் கவிதை அழகாகிறது. “குடை” என்னும் கவிதையில் குடையை தொட்டாற்சிணுங்கியாக்கி, நிழலைக் கண்டால் குடை சுருங்குவதை தொட்டாற்சிணுங்கியோடு ஒப்பிட்டு, தன் கற்பனையால் கவிதைக்கு மெருகூட்டியிருக்கிறார் கவிஞர்.
                “வெயிலுடனும்
                மழையுடனும்
                ஒட்டி உரசி விளையாடுபவன்…
                ஏனோ…
                நிழலைக் கண்டாலே
                தொட்டாற்சிணுங்கியாகிவிடுகிறான்”

                கவிஞரின் கற்பனையை நமக்கு உணர்த்தும் இன்னொரு கவிதையாய் மலர்கிறது ஜன்னல் குறித்த கவிதை. “ஜன்னலோர வேடிக்கை” என்ற தலைப்பில் ஜன்னலோரம் பார்க்கும் காட்சிகள் இவ்வுலகை யதார்த்த சினிமாவாய் கண்முன் கொணர்கிறது என்கிறார் கவிஞர்.
                “சாமானியர்களின்
                அன்றாட வாழ்க்கையை
                எடுத்துரைக்கும்
                யதார்த்த சினிமா”

         “மிக எளிமையாக ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையோடு தொடர்புள்ள விஷயங்களைத் தொட்டு அவற்றின் இயல்பைச் சிதைக்காமல் சுமந்தபடி, நிதர்சனங்களைச் சுட்டிக்காட்டியபடி செல்கின்றன கவிஞர் ச.இந்துமதியின் மனதோடு மழைச்சாரல் நூலினுடைய அனைத்துக் கவிதைகளும்” என்று நூலின் அணிந்துரையில் பாவையர் மலர் இதழாசிரியர் – எழுத்தாளர் முனைவர் ம. வான்மதி அவர்கள் கூறியிருப்பதைப் போல, அன்றாட வாழ்வின் அம்சங்களை அதன் இயல்பை சிதைக்காமல் கவிதையாய் நம் கண்முன் கொணர்கின்றன கவிஞர் இந்துமதியின் கவிதைகள்.

        நூலின் எல்லாக் கவிதைகளும் விடுகதைத் தொனியில் இருப்பதும், தலைப்பை கொண்டே கவிதைகளை புரிந்து கொள்ளும் நிலையிலிருப்பதும் நூலின் வாசிப்பை சற்றே தொய்வாக்குகின்றன. எனினும், கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற முறையில் இந்நூல் சிறப்பாக வெளிவந்து அவரின் எழுத்துலக பிரவேசத்திற்கு அடித்தளமிட்டிருக்கிறது எனலாம்.

நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

No comments:

Post a Comment