Tuesday, 2 July 2019



நூல்                                       : கதம்பப் பூக்கள்
தொகுப்பாசிரியர்             : எழுத்தாளர் ஆர்.மணிவண்ணன்
வெளியீடு                          : பாவைமதி வெளியீடு
பக்கங்கள்                          : 80
விலை                                  : ரூ. 60 /-

                பூக்கள் என்றாலே அழகு தான். அதிலும் ஒரே இடத்தில் பூத்திருக்கும் பல்வகையான பூக்கள் நறுமணத்தாலும், வண்ணங்களாலும் நம்மை ஈர்த்து மனதிற்கு புத்துணர்வையும் பார்வைக்கு பரவசத்தையும் தரவல்லவை.

                பலவண்ண பூக்கள் நந்தவனத்தை அலங்கரிப்பதைப் போல கதை, கவிதை, நகைச்சுவைத் துணுக்குள் போன்ற பல்சுவை படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது எழுத்தாளர் ஆர்.மணிவண்ணன் அவர்களின் “கதம்பப் பூக்கள்” நூல்.

                அப்பாவும் அம்மாவும் பொருளீட்ட பணிக்கு செல்வது இன்றைய சூழல். கூட்டுக்குடும்பங்கள் குறைந்து தனிக்குடும்பங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் குழந்தைகள் மீதான பெரியவர்களின் அக்கறையும், குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரமும் குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில் குழந்தைகளுக்கு உற்றதுணையாய் இருப்பவை பொம்மைகளே என்ற கருத்தை “தனிமை” என்றொரு கவிதையில் முன்வைக்கிறார் கவிஞரான எழுத்தாளர் ஆர்.மணிவண்ணன் அவர்கள்.
                “அந்த வீட்டில்
                குழந்தைகளிடம்
                அன்பு காட்ட
                யாருமில்லை
                பொம்மைகளைத் தவிர!”

                மனிதர்கள் இளமைக்காலத்தில் வாய்ப்புகளையும் பணத்தையும் தேடி ஓடுகின்றனர். அந்த ஓட்டத்தில் அவர்கள் தங்களை சுற்றியுள்ள சுற்றத்தாரையோ தன் உடல் ஆரோக்கியத்தையோ கண்டுகொள்வதில்லை. இதனால் ஆரோக்கியம் குன்றுவதும், பின் வயதான காலத்தில் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஈட்டிய பணத்தை செலவழிப்பதும் நடைமுறை யதார்த்தமாக விளங்குகிறது. இதை “செல்வம்” என்றொரு கவிதையில் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
                “தனது செல்வம்
                செழிக்க வேண்டும்
                என உடல்நிலையை
                கருதாத ஒருவனின்
                செல்வம் சேர்ந்தது
                அருகில் உள்ள
                மருத்துவரிடம்!”

                அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் சொல்லொன்றும் செயலொன்றுமாக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டுவதுடன், மேடையில் ஒரு முகமும் மேடைக்குக் கீழ் மற்றுமொரு முகமுமாக இயங்கும் அவர்களின் தன்மையை “கேடு” என்னும் நிமிடக்கதையின் வாயிலாக நம் கண்முன் கொணர்கிறார் நூலாசிரியர் ஆர்.மணிவண்ணன்.
                “மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உடலுக்கு, உயிருக்கு கேடு என்று மேடையில் முழங்கிய அரசியல்வாதி, தன் வீட்டிற்கு புறப்படும்போது டிரைவரிடம் சொன்னான், ஒரு ஆஃப் பிராந்தி வாங்கி வச்சிடு”

                நாவின் சுவை அரும்புகளைத் தூண்டும் அறுசுவைப் போல், மனதின் உற்சாக அரும்புகளை துளிர்க்க செய்பவை நகைச்சுவை. யாருடைய மனமும் புண்படாதவாறு இருக்கும் நகைச்சுவைகாள் காலம் கடந்தும் ரசிக்கப்படும்.

                அன்றாட நிகழ்வுகளின் மீதான நமது பார்வையை நகைச்சுவை துணுக்குகளில் முன்வைப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் வாயிலாக நல்ல கருத்துகளை கூறி விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும். இதை உணர்த்தும் வகையில் கொளுத்தும் வெயிலையும், அந்த வெயிலில் இளைப்பாற்றிக் கொள்ள ஏடிஎம் மையங்களை நோக்கி சிலர் செல்வதையும் தன் நகைச்சுவை வழி சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
               
“அடிக்கடி ஏ.டி.எம்க்கு போறீயே… பணம் நிறைய இருக்கா?”

                “நீ வேற…வெயில் தாங்க முடியல…கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு தான்”

                இன்றைய சூழலில் செய்திகளை மக்களிடம் சென்று சேர்ப்பதிலும், மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவதிலும் சமூக ஊடகங்களின் பணி அளவிட இயலாதது. இதை தன் நகைச்சுவையில் அழகாக முன்னிறுத்துகிறார் எழுத்தாளர் ஆர்.மணிவண்ணன் அவர்கள்.
               
“மகாராஜா ஏன் மாறுவேடத்தில் போருக்குப் புறப்படுகிறார்?”

                “ஓடி வரும்போது நிறைய பேர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போடுறாங்களாம்”

                “நட்பு, சமூக நலம், காதல், பிரிவு என கவிதைகளாகவும், மண், பணம், மனம், குரு பக்தி என கதைகளாகவும் குடும்பம், அரசியல், சினிமா, பள்ளி, மன்னர் என நகைச்சுவை துணுக்குகளாகவும் அனைத்து களங்களிலும் உள்ளவற்றை பூக்களாய் தொடுத்து கலவையாய் கதம்ப்பூவாய் கையில் தொடுத்திருக்கும் கதம்பப்பூக்கள் தயாரிப்பாளர் மாணிவண்ணனை வாழ்த்துவோம்” என நூலின் பதிப்புரையில் பதிப்பாளர் ‘பாவையர் மலர்’ ஆசிரியர் டாக்டர்.ம.வான்மதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதை நூலின் ஒவ்வொரு பக்கமும் மெய்ப்பிக்கின்றன.

                படைப்பாளர்கள் கதை, கவிதை, கட்டுரை போன்ற ஏதேனும் ஒரு வட்டத்துக்குள் தங்களை சுருக்கிக்கொள்ளாமல் பல்வகை படைப்புகளையும் எழுத முனைவது அவர்களின் வெற்றிக்கும் பன்முகத்திறமைக்கும் சான்றாக அமையும். அதை இந்த நூலின் வழி நிரூபித்திருக்கிறார் எழுத்தாளர் ஆர்.மணிவண்ணன் அவர்கள்.

                நூலின் நேர்த்தியான வடிவமைப்பு நூலின் வெற்றிக்கு மற்றுமொரு காரணியாக அமைந்து சிறப்பு சேர்க்கிறது. எனினும், நூலில் ஆங்காங்கே உள்ள எழுத்துப்பிழைகளை சரி செய்திருப்பின் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

நூல் மதிப்புரை
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்
9790231240, 8438256235


No comments:

Post a Comment