புத்தக மதிப்புரை
புல்லாங்குழலும் இருபது துளைகளும்…
கவிஞர் ச.கோபிநாத்
நூல் : புல்லாங்குழலும் இருபது துளைகளும்…
தொகுப்பாசிரியர் : கவிஞர் சீதா – கவிஞர் மகிழினி
வெளியீடு :
வாசகன் பதிப்பகம், சேலம்.
பக்கங்கள் : 112
விலை : ரூ. 90 /-
தனித்துப் பூத்திருக்கும் மலரைக் காட்டிலும்,
மாலையாய் சங்கமித்த மலர்கள் கண்களுக்கு விருந்தாக
அமையும். தனித்திருக்கும் மூங்கில் உடைபடும் நிலையில், கட்டுகளாய் கட்டப்பட்ட மூங்கில்கள்
உடைபடாது உறுதியாய் நிற்கும். இவையே ஒற்றுமையின் பலம்.
சென்னை பெருவெள்ளத்தின்போதும், ஜல்லிக்கட்டுக்கான
போராட்டத்தின்போதும் இளைஞர்களின் பேராற்றலை உலகுக்கு உணர்த்த உறுதுணையாய் இருந்தது
முகநூல்.
ஒற்றுமையும் முகநூலும் ஒன்றுபட்டதில்
சங்கமித்த கவிஞர்கள் இருபது பேரின் கூட்டுமுயற்சியால் உதயமாகி தமிழ் படைப்புலகில் கவிதைத்தடம்
பதிக்க வெளிவந்திருக்கிறது கவிஞர்கள் சீதா – மகிழினி அவர்கள் தொகுப்பித்த “புல்லாங்குழலும்
இருபது துளைகளும்…” கவிதை நூல்.
முற்றுப்புள்ளிகளோடு கவிதைகள் முற்றுப்
பெறுவதில்லை. சொல்ல துடித்து சொல்ல இயலாமல் போன சொற்களாலான வாக்கியங்கள் இரு முற்றுப்புள்ளிகளுக்கிடையே
வெளிவர இயலாமல் திணறுகின்றன என்ற கவிஞர்களின் மனக்காட்சியை வாசகர்களின் கண்முன் கொணர்கிறார்
கவிஞர் வெ.சுப்ரமணியன் அவர்கள்.
“இரண்டு முற்றுப் புள்ளிகளுக்கு நடுவே
மூர்ச்சையாகிக் கிடக்கின்றன, சொல்ல முயன்று
தோற்றுப் போன வாக்கியங்கள்”.
இன்றைய சூழலில், மகளைப்
பெற்றெடுக்க தாயும் தந்தையும் இழக்க வேண்டியவை ஏராளமாய் இருக்கின்றன. தாயும் தந்தையும்
தெளிவாய் இருந்தாலும் சமூகம் விடுவதாயில்லை. இத்தகையை சூழலிலும் பெண் குழந்தைகளைப்
பெற்றெடுக்கும் பெற்றோருக்கேத் தெரியும் அவர்கள் தேவதையை குழந்தையாய் பெற்றிருப்பது.
இத்தகைய தாயின் மனநிலையை தன் கவிதையில் கண்முன் கொணர்கிறார் கவிஞர் இந்து சம்யுக்தா
அவர்கள்.
“இழந்தவை அதிகமெனினும்
‘பெற்றது’ உனை என்பதால்
பெரும் பேறுதான்
எனக்கு…!”
பெண்கள் எல்லோரையும் உயர்த்தி
பார்க்கும் மனம் படைத்தவர்கள். தியாகம் பெருக்கெடுக்க தன்னலம் பாராமல் தன் குடும்பத்துக்காக
உழைக்கும் பெண்கள் வலிகளை தான் சுமந்தாலும் வசந்தத்தை பிறருக்கு பரிசளிப்பவர்கள் என
பெண்களின் பெருமையை கவிதையாய் படைத்திருக்கிறார் கவிஞர் முஹம்மது அப்பாஸ் அவர்கள்.
“சந்ததிகளைப் பெற்றெடுத்து சரித்திரங்களை வளர்த்தெடுத்தாய்
சாத்திரங்கள் உடைத்தெறிந்து இன்று சமுத்திரமாய் உருவெடுத்தாய்”.
அயலக வேலையென்பது பொன்னையும்
பொருளையும் கொட்டி கொடுத்தாலும், அது கொண்டுபோவதென்னவோ வாழ்வின் சந்தோசங்களைத்தான்.
வாழ்வை அர்த்தப்படுத்தும் சின்ன சின்ன சந்தோசங்களையும் இழக்கும் அயலக பணியாளர்களின்
வலியை கவிதையாய் வார்த்தெடுத்திருக்கிறார் கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் மாஹின் அவர்கள்.
“தோளில் சுமக்கவேயில்லை தோளுக்குமேல்
வளர்ந்துவிட்டான் இன்றென் அன்பு மகன்”
அறிவியல் வளர்ச்சியாலும்
நகரமயமாதலின் விளைவாலும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்வது இப்போது இயல்பாகிவிட்டது.
எத்தனை வசதிகள் நகரங்களில் இருந்தாலும், மனதிற்குஇதமளிக்கும் இனியவை நிறைந்திப்பது
கிராமங்களில் தான் என்று கிராமங்களின் பெருமையை தன் கவிதையில் உயர்த்திப் பிடித்திருக்கிறார்
கவிஞர் து.பிரேம்குமார் அவர்கள்.
“சோடாபுட்டி, பொடிமட்டை, சோனி, கருவாச்சி பட்டபேரு
கூட்டாஞ்சோறு, சல்லிக்கட்டு, கொளத்து நீச்சல், கிளிசோசியம்
பேய்விரட்டு, குலவபாட்டு ஒன்னவிட்டு ஒன்னசொன்னா
ஊர்ப்பெருமை என்னாகும்
பத்துநாள் சொன்னாக்கூட பாதியே முடியாது”
காதல் பலரை கவிஞனாக்கும்.
காதல் பிரிவோ அவர்களை தத்துவவாதியாக்கும். இதை நிரூபிக்கும் விதத்தில் காதல் பிரிவில்
தன் கவிதையை தத்துவமாய் படைத்துள்ளார் கவிஞர் செல்வா அவர்கள்.
“எல்லாருமே சிலகாலம்
ஏதும் நிரந்தரம்ல்ல
எதுவும் நம் சொந்தமல்ல…
தொலைந்ததைத் தேடி
இருப்பதை இழக்க முயலவில்லை”
“நட்சத்திரம்
இது சூரியன் சிந்திய
வியர்வைத் துளிகள்”.
இது கவிஞர் ர.நானகுமார்
அவர்களின் கவிதை. கற்பனை என்பது கவிஞர்களுக்கே உரிய தனித்துவம் என்பதை நிரூபிக்கிறது
இவரின் இந்தப் படைப்பு.
தனிமை பலருக்கும் பிடித்த
ஒன்று. கவிஞனின் தனிமை கவிதையாய் உருமாறும். எனினும் தனிமை வலியே என்று தனித்திருத்தலின்
வலியை வார்த்தையால் கொட்டியிருக்கிறார் கவிஞர் ஸ்வேதா சந்திரசேகரன் அவர்கள்.
“ஒரு பக்கம் சாளரம்!!! இன்னொரு பக்கம் கதவு…
மற்ற ரெண்டுபக்கம்
சுவரு! முடிந்தது உலகு…
……………………………………………………………….
கொண்டாட கோடி தினங்கள் இருந்தாலும்
சலிப்பாக்கும் தனிமை…”
சுயநலம் தவிர்த்து பிறர்நலம்
பேணுவதே நமக்கு நல்ல இதயங்களை பரிசளிக்கும். அத்தகைய வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாய்
அமையும் என்று வாழ்தலின் பொருளை தன் கவிதையில் பட்டியலிடுகிறார் கவிஞர் அ.அந்தோணி குருஸ்
அவர்கள்.
“தனக்குத் தனக்கு என்று வாழ்ந்தால் தரம் தாழ்ந்து விடுவாய்
தன்னை மறந்து பிறருக்காக வாழ்ந்து பார்
என்றுமே உயர்ந்து நிற்பாய்”
“வானுயுரே பறந்திட்டேன்
கருடன் எனவே கும்பிட்டீர்
வகைதெரியா இறுமாப்பு வந்ததென் மண்டையிலே
கனத்தின் கனம் தாளாமல் கவிழ்ந்ததென்
தலை கீழே
இழுத்ததென்ன புவிஈர்ப்பா
மோதியழிந்தேன் பாறையிலே…!”
என்று
வாழ்வில் வெற்றி பெறுவோர் எல்லாரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய பாடத்தை கவிதையாய்
படைத்திருக்கிறார் கவிஞர் இரா.பிரபுலிங்கம் அவர்கள். தலைக்கனம் மனிதனின் எத்தகைய வளர்ச்சியையும்
அழிக்கவல்லது என்பதை உணரவைக்கிறார் கவிஞர்.
“அவன்
வியர்வையில் விளைந்ததெல்லாம் பொதுவுடைமை
விலையில்லா அரிசி மட்டுமே அவனுக்கு
தனியுடைமை”
என்று
விவசாயிகளின் கண்ணீர் கதையை கண்முன் கொணர்கிறார் கவிஞர் குகன் (எ) தாமோதரன் அவர்கள்.
விவசாயிகளின் நிலையையும் விவசாயத்தின் நிலையையும் கூறி இன்றைய சூழலில் வேளாண்மை படும்பாட்டையும்
எடுத்துக்காட்டி எதிர்காலத்தை எண்ணி எச்சரித்திருக்கிறார்.
நல்ல
கவிதை மொழியில் தன் எண்ணத்தை முன்வைக்கும் கவிஞர் ராஜி தன் கவிதை நடையால் தனித்துவமாய்
தெரிகிறார். காட்சிப்படுத்துதலும், யதார்த்தப் பதிவுகளை கவிதையாக்குவதும் இவருக்கு
கைவசமாகியிருக்கிறது என்பதற்கு இவரது கவிதைகளே சான்று.
“ஒரு கனவை செதுக்க ஆரம்பிக்கிறேன்
ஒரு குழந்தையொருத்தி கடற்கரை
மணலில் சிற்பம் செதுக்குகிறாள்”
சமூகம்
வகுத்த எல்லைகளுக்குள் முடங்கிப் போன பெண்கள், தங்களின் சுயம் அறியாது இருக்கும் நிலையை
கடந்து வர துணிச்சல் ஒன்றே அருமருந்து என்று பெண்ணிய கருத்துகளை தன் கவிதையெங்கும்
படரவிட்டிருக்கிறார் கவிஞர் அருணா சுரேஸ் கந்தசாமி அவர்கள்.
“விடியல்கள் அறியாதிருந்தேன்
விடிந்ததுமே இருளிலிருந்தேன் உலகம்
படிக்காத பெண்ணாயிருந்தேன்
வாசல் படிகூடத் தாண்டாதிருந்தேன்
இன்று என்னை அறிந்து கண்டேன்
எதற்குமே துணிந்து கொண்டேன்”
பேசுவதும்,
பேசிக் கொண்டேயிருப்பதும் காதலோடு இரண்டற கலந்தது. எது குறித்தும் பேசுவதும், தன் இணை
பேசுவதை ரசிப்பதும் காதலின் அழகு. இந்த சிந்தனையை ரசனை கலந்த கவிதையாய் படைத்திருக்கிறார்
கவிஞர் சிவகாமி அவர்கள்.
“நான் ‘ம்ம்’ சொல்லி ரசிப்பதற்காகவே
நீளமான கதை சொல்கிறான்
மடியில் தலைவைத்து
கதை கேட்கும் போதெல்லாம்…”
தேர்ந்த
சொல்லாடல்களுடன் இளமை ததும்பும் கருத்துகளை கவிதைகளாக்கியிருக்கிறார் இளங்கவிஞர் சர்வேஷ்.இரா
அவர்கள்.
நட்பு
வாழ்வை மாற்றும் வல்லமை பெற்றது. நல்ல நட்பு வாழ்வை வசந்தமாக்கும் வரம் வாய்க்கப் பெற்றது.
தாய், தந்தை, சகோதரன், சகோதரி இவர்களிடமில்லாத ஒரு பிணைப்பை நண்பர்களிடம் பெற முடியும்
என்கிறார் கவிஞர் பெலிக்ஸ் பெமினியன் அவர்கள்.
“தாயிடம் சொல்ல முடியாமல்
வரும் பிரச்சனைகளையும்
தந்தையிடம் பெற இயலாமல்
போகும் தேவைகளையும்
சகோதரன் உறவு இல்லாமல்
ஏங்கும் ஏக்கத்தையும்
சகோதரி வழிகாட்டி இல்லாமல்
வரும் இன்னல்களையும்
இவை அனைத்தையும்
ஒருவரிடம் மட்டுமே பெற முடியும்
அவனே உறவினும் இனிய என் தோழன்!”
தமிழ்மொழி
மொழியாய் மட்டுமின்றி வாழ்வின் அறம் பேசும் வழியாகவும் இருப்பதே அதன் இயல்பு. புவியில்
உயர்ந்த மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை தன் கவிதை வழி உயர்த்திப்பிடித்திருக்கிறார்
கவிஞர் சிவதர்சினி ராகவன் அவர்கள்.
“ஒளவை வள்ளுவர் வாய்மை சொல்லி
வாழும் வழி நூறு அள்ளி வேகம்கொண்ட
புயலாக
புலிவீரர் செய்த தியாகம் சொல்லி மலர்ந்தவளே
உனை
அள்ளி மகிழும் மனதோரம் சாரல் வீசுமே…”
வார்த்தைகள்
மாபெரும் வல்லமை பெற்றவை. வார்த்தைகளால் தான் வரலாறுகள் உருவாகின்றன. அத்தகைய வார்த்தைகளின்
வலிமையால் உருவானவையே ஹைக்கூ வடிவக்கவிதைகள். தன் ஹைக்கூ கவிதைகளில் வறுமையின் வலியை
வாசகர்கள் உணரும் வண்ணம் படைத்திருக்கிறார் கவிஞர் மகிழினி காந்தன் அவர்கள்.
“சாண்வயிற்றுக்காய்
முழம் நீளும் கைகளில்
பசிரேகைகள்”
அழகியல்
கவிதையை அழகாக்கும். வாசிப்பை நேசிக்கத் தூண்டும். வாழ்வின் சின்ன சின்ன நிகழ்வுகளில்
உள்ள அழகியலை ரசிப்பதே வாழ்வை அழகாக்கும். அத்தகைய அழகியல் பார்வையால் பளிச்சிடுகிறது
கவிஞர் சீதா ஷாம்குமார் அவர்களின் கவிதை. வறுமையையும் மீறி வீட்டில் விழும் மழைத்துளிகளை
தோரணங்களாக்கி அழகு பார்க்கிறது இவரது கவிமனது.
“ஏழை வீட்டுக் கூரைகளின்
அலங்காரத் தோரணங்கள்
மழைத் துளிகள்.”
வித்தியாசமான
சிந்தனைகளே கவிதையை காலம் கடந்தும் நிலைநிறுத்தும். அந்த சிந்தனை சமூகத்துக்கும் நலம்
பயக்குமெனில் இன்னும் சிறப்பு. எல்லோரும் ஏளனமாய் பார்க்கும் திருநங்கைகளின் வாழ்வை
அவர்களின் வலியை உணர்ந்து அணுகியிருக்கிறார் கவிஞர் நதனிகா ராய் அவர்கள்.
“செய்கூலி அதிகம் இல்லை
சேதாரம் நிறைய உண்டு
எங்கள் வாழ்க்கையில் இப்படிக்கு….
திருநங்கை(கள்).
வாசகன்
பதிப்பக வெளியீட்டில் கவிஞர்கள் சீதா, மகிழினி ஆகியோரது முயற்சியில் இருபது கவிஞர்களின்
சிந்தனைகளையும் ஒருசேர வாசிக்கும் வாசிப்பு அனுபவத்தை இந்த தொகுப்பு தருகிறது.
“ஒரு
புல்லாங்குழலின் இருபது துளைகளும் இருபது விதமான ஓசைகளினை செவியிட்டு செல்கின்றன. இந்த
இசை வாசக மனங்களைத் தூங்க வைக்கும். துணிய வைக்கும். எழ வைக்கும். ஏற்றம் காண வைக்கும்”
என்று அணிந்துரையில் செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி அவர்கள் கூறிய
வார்த்தைகள் நிதர்சனம் என்பது புலனாகிறது.
தொடர்ந்து
எழுதுவதும், எழுதுவதை பல முறை படித்து செதுக்குவதும், பிறமொழி கலப்பை தவிர்ப்பதும்
என குறும்பட இயக்குநர் எழில் அவர்கள் கூறிய வழிகாட்டலை இக்கவிஞர்கள் பின்பற்றினால்
தமிழ் படைப்புலகில் முத்திரை படைக்கும் படைப்புகளை தரலாம். சிகரம் எட்டும் சாதனைகளைப்
படைக்கலாம்.
மதிப்புரை
கவிஞர்
ச.கோபிநாத்
சேலம்

No comments:
Post a Comment