குழந்தையின்
குரல்
எதிர்பார்ப்புகள்
சூழ
அன்பின்
கரம்பிடித்து
தாயின்
கருவறையில்
அரவணைப்பாய்
இருந்ததில்
எனை
சூழ்ந்திருந்தது பாதுகாப்பு.
மனிதர்கள்
சூழ்ந்த இப்புவியில்
பிறந்த
நிமிடம் முதல்
குரல்வளையை
இறுக்குகிறது
எங்கும்
சூழ்ந்திருக்கும் மாசு.
மேனிதீண்டும்
செயற்கைக்காற்று
நாசிக்குள்
நச்சரிக்க
மனதுக்குள்
ஏக்கத்தை விதைக்கிறது
இயற்கை
காற்று மீதான எதிர்பார்ப்பு.
பொய்த்த
வானம்
பெய்ய
மறுக்கும் மழையால்
நிலமும்
மக்களும்
ஏங்கி
கிடக்கும் இந்நாட்களில்
தொண்டையை
நெரிக்கிறது தீராத்தாகம்.
பேராசை
பெருக்கெடுத்த
மனிதர்களின்
எண்ணத்தால்
இருண்டு
கிடக்கும் எதிர்காலத்தை மாற்றி
எனை
போன்றே
எதிர்வரும்
தலைமுறையினரும்
இனிதே
வாழ
இனியாவது
நடுங்கள்
ஆளுக்கொரு
மரத்தை.
கவிஞர்
ச.கோபிநாத்
சேலம்
நன்றி-தினமணி - கவிதைமணி

No comments:
Post a Comment